கவரைப்பேட்டை ரயில் விபத்து சதியா? அதிகாரிகள் அறிக்கை; ரயில்வே கப்சிப்!
கவரைப்பேட்டை ரயில் விபத்து சதியா? அதிகாரிகள் அறிக்கை; ரயில்வே கப்சிப்!
ADDED : அக் 17, 2024 01:37 AM
சென்னை:'கவரைப்பேட்டை ரயில் விபத்தில் சதி திட்டத்திற்கான வாய்ப்புள்ளது' என, அதிகாரிகள் அறிக்கை அளித்திருப்பதாக தகவல் வெளியானது. ஆனால், தெற்கு ரயில்வே தரப்பில், அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
தடம் புரண்ட 13 பெட்டிகள்
திருவள்ளூர் மாவட்டம், கவரைப்பேட்டை ரயில் நிலையம் அருகே, கடந்த 11ம் தேதி இரவு நின்றிருந்த சரக்கு ரயில் மீது, கர்நாடகா மாநிலம் மைசூரில் இருந்து, பீஹார் மாநிலம் தர்பங்கா நோக்கி சென்ற, பாக்மதி விரைவு ரயில் மோதியது. இதில் 13 பெட்டிகள் தடம் புரண்டன; உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.
விபத்து நடந்த இடத்தில், என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அங்கு 'ஸ்விச் பாய்ன்ட் போல்ட்'கள் கழற்றப்பட்டு இருந்தன.
இது வழக்கத்துக்கு மாறாக இருந்ததை கண்டுபிடித்தனர். தடயவியல் நிபுணர்கள், அந்த மாதிரிகளை எடுத்து சென்றனர்.
விபத்து குறித்து, கவரைப்பேட்டை ரயில் நிலைய அதிகாரி முனிபிரசாத் பாபு, கொருக்குப்பேட்டை போலீசில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், நான்கு பிரிவுகளில், ரயில்வே போலீசார் வழக்கு பதிந்தனர்.
முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட நிலையில், ஒவ்வொருவருக்கும் 'சம்மன்' கொடுத்து விசாரிக்க, ரயில்வே போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.
16 பக்க அறிக்கை
இதற்கிடையே, இந்த சம்பவம் குறித்து ரயில்வே அதிகாரிகள் குழு, 16 பக்க அறிக்கை சமர்ப்பித்துள்ளது. அதில், கவரைப்பேட்டை ரயில் விபத்தில் சதி திட்டம் நடந்திருக்க வாய்ப்புள்ளது என கூறியிருப்பதாக, தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, 'கவரைப்பேட்டை ரயில் விபத்து குறித்து, தென்மண்டல பாதுகாப்பு ஆணையர், 13 பிரிவு அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி வருகிறார்.
விசாரணை முடிந்த பின்தான் எதுவும் தெரிவிக்க முடியும். தற்போது எதுவும் கூற முடியாது' என்றனர்.