'போலீஸ் துறை நம் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறதா?' ஐயத்தில் தமிழக அமைச்சர்கள்
'போலீஸ் துறை நம் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறதா?' ஐயத்தில் தமிழக அமைச்சர்கள்
UPDATED : ஆக 03, 2025 08:57 AM
ADDED : ஆக 03, 2025 02:57 AM

சமீபத்தில் நடந்த சில சம்பவங்களால், 'போலீஸ் துறை நம் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறதா?' என்று சில அமைச்சர்கள் கேள்வி எழுப்பி வருவதாக தெரிகிறது.
சிவகங்கை மாவட்டத்தில் அஜித்குமார், போலீஸ் விசாரணையின் போது இறந்த பிரச்னையின் ஈரமே காயாத நிலையில், அடுத்ததாக, திருநெல்வேலி மாவட்டத்தில் கவின் என்பவர் ஆணவ கொலை செய்யப்பட்டு உள்ளார்.
அஜித்குமார் கொலையில், அரசு பெரும்பாடு பட்டு தான் சமாதானத்தை ஏற்படுத்தியது. பல அமைச்சர்களும் தி.மு.க., பெரும் புள்ளிகளும் முயற்சி எடுக்க வேண்டி இருந்தது.
கொலையான கவின் காதலித்த பெண்ணின் தந்தையும், தாயும் போலீஸ் துறையை சேர்ந்தவர்கள் என்பதால், அரசுக்கு பெரும் தலைவலி ஏற்பட்டது. பிரச்னையை சமாதானம் செய்ய எம்.பி.,யும், அமைச்சர் ஒருவரும் முதலில் பணிக்கப்பட்டனர். அவர்கள், கவின் குடும்பத்தாரிடம் பேச்சு நடத்தினர். ஆனால், சமாதானமாகாமல், கவின் உடலை வாங்க குடும்பத்தார் மறுத்துவிட்டனர்.
அதனால், திருநெல்வேலிக்கு பொறுப்பு அமைச்சராக இருப்பவரிடம், 'எங்களால் ஆனதை செய்து பார்த்துவிட்டோம். நீங்கள் தானே பொறுப்பு அமைச்சர், நீங்களே சமாளியுங்கள்' என, இருவரும் சொல்லிவிட்டனர்.
இதையடுத்து, தென் மாவட்ட போலீஸ் உயரதிகாரியாக இருப்பவரிடம், அமைச்சர் பேசினார். 'போலீஸ் சரியாக செயல்பட்டு இருந்தால், இந்த பிரச்னை இவ்வளவு பெரிதாகி இருக்காது. கவின் குடும்பத்தாரை சமாதானப்படுத்தி, உடலை பெற்று அடக்கம் செய்யச் சொல்லுங்கள்' என்று அமைச்சர் சொன்னதாகவும், அதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என தெரிகிறது.
இதையடுத்து, கவின் வீட்டாரை சந்தித்துப் பேச, நெல்லைக்குக் கிளம்பினார் பொறுப்பு அமைச்சர். அதற்கு முன், போலீஸ் துறையை ஒத்துழைக்கச் சொல்லி உத்தரவிடும்படி, கேட்க வேண்டிய இடத்தில் கேட்டார். 'கவின் விவகாரத்தில், போலீஸ் நடவடிக்கை முழுதும் சரியில்லை. காவல் துறை தலைமையிடம் பேசுங்கள்' என்று அவரிடம், அமைச்சர் சொன்னார். 'யார் அந்த கவின்... நெல்லையில் அப்படி என்ன பிரச்னை?' என்று, போலீசாருக்கு உத்தரவிடக் கூடியவர் கேட்கவே, அமைச்சர் ஆடிப்போய்விட்டார்.
நடந்ததை எல்லாம் ஆதி முதல் அந்தம் வரை விளக்கிய அமைச்சர், 'இப்படித்தான், அஜித்குமார் பிரச்னையை அடுத்து, நம் மீது ஹிந்து நாடார்கள் கோபமானார்கள். இப்போது, தலித்துகள் மத்தியிலும் கோபத்தை கிளப்பி விடுகிறார்கள். தேர்தல் நெருங்குகிறது, போலீசாரை எச்சரித்து வைக்காவிட்டால், நமக்கு பாதகமாக இருக்கும்' என்றும் சொன்னார்.
சுதாரித்துக்கொண்ட அவர், அமைச்சர் ஆலோசனைப்படி, தனக்கு நேரடி கட்டுப்பாட்டில் உள்ள மாநில உயர் போலீஸ் அதிகாரியிடம், தென் மாவட்ட போலீஸ் உயர் அதிகாரியை கட்டுக்குள் கொண்டு வருமாறு கூறினார்.
சமீப காலமாக, தனக்கு எவ்வித மரியாதையும், முக்கியத்துவமும் இல்லை என்ற அதிருப்தியில் இருக்கும் அவர், 'வெறும் பெயர் அளவில் மட்டும் தான், நான் உயர் போலீஸ் அதிகாரி. எனக்கு கீழ் நிலையில் இருக்கும் இரு போலீஸ் அதிகாரிகள் தான் சர்வ சக்தி படைத்தவர்களாக செயல்படுகின்றனர். அவர்களிடமே சொல்லி, ஏதாவது செய்து கொள்ளுங்கள்' என, தன்னுடைய விரக்தியை, நேரம் பார்த்து வெளிப்படுத்தினார்.
அதன் பிறகு, ஒரு வழியாக போலீஸ் அதிகாரிகளை சமாளித்த பின் தான், கவின் உடலை வாங்க சம்மதிக்க வைக்க முடிந்ததாக ஆளும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
- நமது நிருபர் -.