காங்., மகளிரணி பதவிகளுக்கு மீண்டும் வருகிறதா சிபாரிசு சிஸ்டம்
காங்., மகளிரணி பதவிகளுக்கு மீண்டும் வருகிறதா சிபாரிசு சிஸ்டம்
ADDED : ஏப் 10, 2025 02:04 AM

மதுரை : தமிழக காங்., மகளிரணியில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை அடிப்படையில் பதவி வழங்கப்படும் என்ற நிலை மாறி, தற்போது மீண்டும் சிபாரிசு அடிப்படையில் பதவிகள் தாரைவார்க்கப்படவுள்ளதாக மகளிர் நிர்வாகிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
செல்வப்பெருந்தகை மாநில தலைவராக பொறுப்பேற்றது முதல் காங்கிரசில் 'பதவி பஞ்சாயத்து' ஓய்ந்தபாடில்லை. ஆரம்பமே மாநில, மாவட்ட நிர்வாகிகளை மாற்றுவதற்கான அறிவிப்பை செல்வப்பெருந்தகை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பினார்.
பின் திராவிடக் கட்சிகளுக்கு இணையாக மாநில, மாவட்ட நிர்வாகிகள் பதவிக்கு விண்ணப்பிக்கும் போது விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும் என கட்சி வரலாற்றில் முதல் முறையாக அறிவித்தார்.
இதை தாண்டி தற்போது மாவட்ட தலைவர்களாக உள்ளவர்கள் பதவிக்கும் சேர்த்து விண்ணப்பம் பெற்றது கட்சிக்குள் புயலைக்கிளப்பி இன்னும் புகைந்து கொண்டிருக்கிறது.
இதற்கிடையே மகளிரணியில் மாநில தலைவி சையது ஹசீனாவை தவிர மாநில, மாவட்ட அமைப்புகள் பதவிகள் ஒரே நாளில் கலைக்கப்பட்டன.
இதையடுத்து பதவி வேண்டும் என்றால் கட்சியில் புதிய உறுப்பினர்களை சேருங்கள் என மாநில, மாவட்ட பதவிக்கு போட்டியிடுபவர்களுக்கு உறுப்பினர் சேர்க்கை இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதையடுத்து பலர் போட்டி போட்டு புதிய உறுப்பினர்களை சேர்த்தனர். ஆனால் இதுவரை எந்த பதவியும் வழங்கப்படவில்லை.
மீண்டும் பதவிகளுக்கு சிபாரிசா
இதுகுறித்து மகளிர் அணி நிர்வாகிகள் கூறியதாவது: மகளிர் நிர்வாகிகள் அதிக ஆண்டுகளாக பதவியில் உள்ளனர் எனக் கூறி அகில இந்திய மகிளா காங்., தலைவி அல்காலம்மா 2024 அக்டோபரில் தமிழகம் உட்பட 6 மாநிலங்களில் மகளிரணியை கலைத்தார். மாநில தலைவிகள் மட்டும் நியமிக்கப்பட்டனர். இதையடுத்து மாவட்டங்களில் மகளிரணியை வலுப்படுத்த புதிய உறுப்பினர்கள் சேர்க்கை இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
மாவட்ட தலைவி பதவிக்கு குறைந்தது 150 உறுப்பினர் சேர்க்க வேண்டும். உறுப்பினர் கட்டணம் ரூ.100. இக்கட்டணத்தை உறுப்பினரை சேர்க்கும் நாங்கள் தான் கொடுத்தோம். இவ்வகையில் 150 பேரை சேர்க்க ரூ.15,000 செலவாகியது.
போட்டி போட்டு உறுப்பினர்களை சேர்த்தோம். தேசிய அளவில் உறுப்பினர் சேர்க்கையில் தமிழகத்தை 6வது இடத்திற்கு கொண்டுவந்தோம். இந்தாண்டு ஜனவரிக்குள் சேர்க்கை முடியும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால் இன்னும் சேர்க்கைக்கான 'வெப்சைட்' செயல்படுகிறது. இதில் தில்லுமுல்லு நடக்க வாய்ப்புள்ளது. சிபாரிசு அடிப்படையில் மீண்டும் மகளிரணி பதவிகள் வழங்கப்படவுள்ளதாக தெரிகிறது என்றனர்.

