தலைவலி தரும் தலைமை செயலக சங்கம்; உடைக்க ஆளும் தரப்பில் ரகசிய முயற்சி?
தலைவலி தரும் தலைமை செயலக சங்கம்; உடைக்க ஆளும் தரப்பில் ரகசிய முயற்சி?
UPDATED : பிப் 13, 2025 05:13 AM
ADDED : பிப் 13, 2025 01:06 AM

சென்னை:அரசுக்கு குடைச்சல் தரும் தலைமை செயலக ஊழியர் சங்கத்தை உடைக்க, ஆளுங்கட்சி தரப்பில் ரகசிய முயற்சிகள் துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், பழைய பென்ஷன் திட்டம் செயல்படுத்தப்படும் என, 2021 சட்டசபை தேர்தலின்போது, வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் முடியவுள்ள நிலையில், பங்களிப்பு ஓய்வூதிய திட்டம்தான் நடைமுறையில் உள்ளது.
இந்நிலையில், ஒருங்கிணைந்த பென்ஷன் திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக, மத்திய அரசு அறிவித்துள்ளது.
வலியுறுத்தல்
'இந்த திட்டத்தில் உள்ள வழிகாட்டு நெறிமுறைகளை ஆய்வு செய்த பின், அதை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்' என, நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார். இதற்கு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது.
பங்களிப்பு பென்ஷன் திட்டம், பழைய பென்ஷன் திட்டம், ஒருங்கிணைந்த பென்ஷன் திட்டம் ஆகியவற்றை ஆராய்ந்து, அதில் சிறந்த திட்டத்தை செயல்படுத்த, மாநில அரசு முடிவெடுத்துள்ளது.
இது குறித்து ஆய்வு செய்வதற்காக, ஊரக வளர்ச்சி துறை செயலர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்ட மூன்று அதிகாரிகள் அடங்கிய குழுவை நியமித்து உள்ளது.
இக்குழுவை கலைக்க வேண்டும் என, தலைமை செயலக ஊழியர்கள் சங்கம், ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு, தமிழக அரசு அலுவலர்கள் ஒன்றியம் ஆகியவை வலியுறுத்தியுள்ளன.
ஆனால், குழு கூட்டத்தை கூட்டி ஊழியர் சங்கங்களின் கருத்தை பெற முடிவெடுத்து, அதற்கான முன்னேற்பாடுகளை, அரசு செய்து வருகிறது.
இந்நிலையில், பழைய பென்ஷன் திட்டம் செயலாக்கம், சரண் விடுப்பு நிலுவைத் தொகை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, தொடர் போராட்டங்கள் நடத்த, அரசு ஊழியர்கள் முடிவெடுத்துஉள்ளனர்.
இதுபோன்ற ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களில், தலைமை செயலக ஊழியர் சங்கத்தினர் கவனம் செலுத்தி வருகின்றனர்.
அரசுக்கு நெருக்கடி
இதைத்தொடர்ந்து, பென்ஷன் ஆய்வுக் குழுவை கலைக்க வலியறுத்தி, சமீபத்தில் கருப்பு, 'பேட்ஜ்' அணிந்து, தலைமை செயலக ஊழியர்கள் பணிக்கு வந்தனர். விடுமுறை நாட்களில், பத்திரப்பதிவு ஊழியர்களை பணி செய்ய அழைப்பதையும் கண்டித்து வருகின்றனர்.
இவ்வாறு தலைமை செயலக ஊழியர்கள் சங்கத்தினரால், அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டு உள்ளது.
இந்நிலையில், சங்கத்தை உடைக்க ரகசிய முயற்சிகள், ஆளுங்கட்சி தரப்பில் துவங்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
தலைமை செயலக ஊழியர் சங்கத் தலைவர் கு.வெங்கடேசன் கூறியதாவது:
சங்கத்திற்கு இரண்டு மாதங்களில் தேர்தல் நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. ஒவ்வொரு துறைக்கும் நியமிக்கப்பட்டுள்ள செயற்குழு நிர்வாகிகள், உறுப்பினர் சேர்க்கையில் தாமதம் ஏற்படுத்தி வருகின்றனர்.
இதை வைத்து பொதுக்குழு கூட்டத்தை கூட்ட வேண்டும்; செலவு கணக்கு காட்ட வேண்டும் என, சிலர் நிர்பந்தம் செய்கின்றனர். பொதுக்குழு கூட்டத்தை, மாலை 6:00 மணிக்குதான் கூட்ட முடியும். அதில், அனைவரையும் பங்கேற்க செய்வது சாத்தியமில்லை.
இதன் பின்னணியில் ஆளுங்கட்சி இருக்கிறதா என்ற சந்தேகம் உள்ளது. இருப்பினும், அதற்கெல்லாம் அசைந்து கொடுக்காமல், எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை, போராட்டத்தை தொடர்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.