சிறைக்கைதிகளின் ஊதிய பிடித்தம் முறையாக பயன்படுத்தப்படுகிறதா? தணிக்கை செய்ய ஐகோர்ட் உத்தரவு
சிறைக்கைதிகளின் ஊதிய பிடித்தம் முறையாக பயன்படுத்தப்படுகிறதா? தணிக்கை செய்ய ஐகோர்ட் உத்தரவு
ADDED : ஜன 22, 2025 12:43 AM
சென்னை:சிறைக்கைதிகளின் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும், பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடு நிதி, முறையாக பயன்படுத்தப்பட்டதா என்று தணிக்கை செய்து அறிக்கை அளிக்கும்படி, மாநில தலைமை கணக்கு தணிக்கையாளருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தீபாலட்சுமி. இவரது கணவர் செந்தில்குமார், வேலுார் சிறையில் தண்டனை கைதியாக உள்ளார். தன் கணவருக்கு முதல் வகுப்பு ஒதுக்கக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், தீபாலட்சுமி மனு தாக்கல் செய்தார்.
மனுவில், 'குற்றவாளிகளால் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்குவதற்காக, சிறையில் பணிபுரியும் கைதிகளின் ஊதியத்தில் இருந்து, 20 சதவீதம் பிடித்தம் செய்யப்படுகிறது. ஆனால், அந்த நிதி முறையாக பயன்படுத்தப்படவில்லை' என்று, குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், எம்.ஜோதிராமன் அடங்கிய அமர்வு விசாரித்தது. இதையடுத்து, 'மாநிலம் முழுதும் உள்ள எட்டு மத்திய சிறைக்கைதிகளின் ஊதியத்தில் இருந்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க பிடித்தம் செய்யப்படும், 20 சதவீத தொகை, முறையாக பயன்படுத்தப்படுகிறதா என்பது தொடர்பாக, ஒரு குழு அமைத்து தணிக்கை செய்ய வேண்டும்.
வரும், 30ம் தேதிக்குள் அறிக்கை அளிக்க வேண்டும் என, தமிழக தலைமை கணக்கு தணிக்கையாளருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளி வைத்தனர்.