ADDED : ஆக 06, 2025 05:52 AM

சென்னை: கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லுாரியில், முதுநிலை படித்துவந்த மாணவி, தனியார் விடுதியில் தற்கொலை செய்து கொண்டார்.
திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரவி மகள் திவ்யா, 26. கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரியில் முதுநிலை பொது மருத்துவம், இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். கீழ்ப்பாக்கம் தர்மராஜா கோவில் தெருவில், அறை எடுத்து தனியாக வசித்து வந்தார்.
திவ்யாவுக்கும், சக மாணவர் ஒருவருக்கும் காதல் ஏற்பட்டதாக தெரிகிறது. இருவரும் வெவ்வேறு சமூகம் என்பதால், குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இருவரும், விடாபடியாக இருந்ததால், முதுநிலை மருத்துவம் முடித்தப்பின், இருவருக்கும் திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்தாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று காலை, வீட்டின் கதவு, நீண்ட நேரம் உள்பக்கம் பூட்டியே இருந்துள்ளது. இதையடுத்து வீட்டின் உரிமையாளர், டி.பி.சத்திரம் போலீசாருக்கு தகவல் அளித்தார். போலீசார், கதவை உடைத்து பார்த்தபோது, திவ்யா துாக்கில் தொங்கிய நிலையில் இருந்தார். அவரது உடலை இறக்கியபோது, அவர் இறந்தது தெரிந்தது.
திவ்யாவின் இறப்புக்கு, காதலில் ஏற்பட்ட பிரச்னை மற்றும் அரசு மருத்துவமனையில் பணிச்சுமை ஆகிய இருவேறு காரணங்கள் கூறப்படுகிறது.
சில நாட்களாக கடுமையான மன அழுத்தம் காரணமாக, மற்றவர்களிடம் பேசுவதை தவிர்த்ததாகவும் கூறப்படுகிறது.
மருத்துவமனை நிர்வாகிகள் கூறுகையில், 'திவ்யாவுக்கு பணிச்சுமை கொடுக்கப்பட்டதாக இதுவரை எவ்வித புகாரும் வரவில்லை. இறப்புக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணையில் தெரிய வரும்' என்றனர்.
வேலுார் அரசு மருத்துவக் கல்லுாரியில் எம்.பி.பி.எஸ்., படித்தபோது தங்கப்பதக்கம் உட்பட, 21 பதக்கங்களை திவ்யா பெற்றிருந்தார்.

