கோவில் யானைகளுக்கு புத்துணர்வு முகாமா?: அமைச்சர் சேகர்பாபு பதில்
கோவில் யானைகளுக்கு புத்துணர்வு முகாமா?: அமைச்சர் சேகர்பாபு பதில்
ADDED : நவ 25, 2024 03:22 AM

துாத்துக்குடி: தமிழக அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு திருச்செந்துாரில் நேற்று அளித்த பேட்டி:
கடந்த காலங்களில் கோவில் யானைகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அருகிலேயே செய்யப்படாததால் புத்துணர்வு முகாம் தேவைப்பட்டது. தற்போது 26 கோவில்களில், 28 யானைகளை அறநிலையத் துறையே பராமரிக்கிறது; அவற்றிற்கு புத்துணர்வு முகாம் தேவைப்படவில்லை.
வனத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அலுவலர்கள் மற்றும் மருத்துவர்களோடு கலந்து ஆலோசித்து, புத்துணர்வு முகாமிற்கு, கோவில் யானைகளை கொண்டு செல்ல வேண்டும் என அறிவுறுத்தினால் அதை ஏற்க, அறநிலையத்துறை தயாராக உள்ளது.
வனத்துறை சட்டத்தின் படியும், தற்போது இருக்கும் விதிகளின்படியும் வனத்துறையின் அனுமதி பெற்ற பிறகு தான் யானை தொடர்பான நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, திருச்செந்துார் கோவில் யானை தாக்கியதில் உயிரிழந்த பாகன் உதயகுமாரின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய், சிசுபாலனின் குடும்பத்திற்கு, 5 லட்சம் ரூபாயை அவரது குடும்பத்தினரிடம் அமைச்சர் வழங்கினார்.