முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் பிரச்னையா? என்னை வந்து சந்திக்கலாம்: சுப்பிரமணியன்
முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் பிரச்னையா? என்னை வந்து சந்திக்கலாம்: சுப்பிரமணியன்
UPDATED : ஜூன் 20, 2025 01:49 AM
ADDED : ஜூன் 19, 2025 11:17 PM

சென்னை:''தனியார் மருத்துவமனைகளில் முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் பிரச்னை என்றால், என்னை வந்து சந்திக்கலாம்,'' என, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா, தமிழ்நாடு எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையில் நேற்று நடந்தது. மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கிய பின், அமைச்சர் சுப்பிரமணியன் பேசியதாவது:
தமிழகத்தில் 36 அரசு மருத்துவக் கல்லுாரிகள் உட்பட, 75 மருத்துவ கல்வி நிறுவனங்களில் இருந்து, ஆண்டுக்கு 11,850 மருத்துவம் படித்த மாணவர்கள் வெளியில் வருகின்றனர். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் டாக்டர்கள், நர்ஸ்கள் பற்றாக்குறை எதுவும் இல்லை.
கிராமப்புற செவிலியர் 2,240 பணியிடங்கள் மட்டுமே நிரப்ப வேண்டியுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. அதில், தீர்ப்பு கிடைத்தவுடன், பணியிடங்கள் நிரப்பப்படும்.
பொது சுகாதார துறையில் டாக்டர்கள் நியமிக்கப்பட்டு விட்டனர். மருத்துவ கல்வி இயக்குனரகத்திலும் காலிப்பணியிடம் இல்லை. 'ஜைகா' நிதி உதவியுடன் கட்டப்பட்ட கட்டடங்களுக்கு, 250 காவலர்கள் விரைவில் நியமிக்கப்படுவர்.
அரசு மருத்துவமனையில் யாருக்கும் பணி நீட்டிப்பு கிடையாது; கடந்த ஆட்சியில் இருந்திருக்கலாம். கிண்டி அரசு பல்நோக்கு மருத்துவமனை புதிதாக திறக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துஇருப்பதால், அனுபவம் வாய்ந்த டாக்டர் தேவை என்பதால், அங்கு பணியாற்றும் அலுவலர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, இயக்குநருக்கு மேலும் ஓராண்டு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டு உள்ளது.
எதிர்ப்பு தெரிவித்த டாக்டர்கள் சங்கங்களிடமும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
தனியார் மருத்துவமனைகளில் முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை மறுக்கப்பட்டதாக தெரிவித்தால், உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
குறிப்பாக, அதில் பாதிக்கப்பட்டவர்கள் என்னை நேரில் சந்திக்கலாம். சம்பந்தப்பட்ட நிர்வாகத்திடம் பேசி, ஏன் மறுக்கப்பட்டது என விசாரித்து தீர்வு ஏற்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

