மீன்பிடி தடைக்கால நிவாரண நிதியில் பாரபட்சமா? மீனவர்கள் குற்றச்சாட்டு; மீன்வளத்துறை பதில்
மீன்பிடி தடைக்கால நிவாரண நிதியில் பாரபட்சமா? மீனவர்கள் குற்றச்சாட்டு; மீன்வளத்துறை பதில்
ADDED : ஏப் 20, 2025 01:06 AM
சென்னை:'மீன்பிடி தடை கால நிவாரண நிதி, அனைத்து மீனவர்களுக்கும் வழங்கப்படுவது இல்லை' என, மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதுதொடர்பாக, மீனவர் நலச்சங்கத்தினர் கூறியதாவது:
தமிழகத்தில் மீன்பிடி தடை காலமான, ஏப்ரல், 15 முதல் ஜூன் 14 வரை, ஆழ்கடல் விசைப்படகு மீன்பிடிப்புக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. தடைக்கால நிவாரணமாக, மீனவ குடும்பங்களுக்கு, 8,000 ரூபாய் வழங்கப்படுகிறது.
இதைப்பெற, ரேஷன் கார்டு வைத்திருக்கும் மீனவர்கள், அந்தந்த பகுதியில் உள்ள, மீன்வளத்துறை அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். ஆனால், விண்ணப்பிக்கும் மீனவர்களில் சிலருக்கு நிவாரண நிதி கிடைப்பதில்லை.
அதிகாரிகளிடம் கேட்கும் போது, 'விடுபட்டவர்களுக்கு அடுத்த தவணையில் வரும்' என்கின்றனர்.
அடுத்த தவணையிலும் பணம் வராத பட்சத்தில், அலட்சியமாக பதில் அளிக்கின்றனர். 'கடிதம் எழுதி கொடுத்து விட்டு செல்லுங்கள்' என்கின்றனர். கடிதம் எழுதி கொடுத்தாலும், அதற்கு எந்த பலனும் இருப்பதில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இந்தக் குற்றச்சாட்டுக்கு, மீன்வளத்துறை அதிகாரிகள் அளித்த பதில்:
மீன்பிடி தடைக்கால நிவாரண நிதி அனைவருக்கும் தரப்படுகிறது. கடந்த ஆண்டில், 1.77 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். அதில், தகுதி உள்ள அனைவருக்கும் பணம் கொடுக்கப்பட்டது. நிவாரண நிதி பெற சில தகுதிகள் உள்ளன.
குடும்பத்தில் அரசு வேலை பார்ப்போர், அரசு ஓய்வூதியம் பெறுபவர் இருந்தால் கிடைக்காது. அதேபோல், விவசாய உதவி பெற்றவர்களாக இருந்தாலும், இந்த நிதி வழங்கப்படாது. மீனவ சமுதாயத்தில், பல பேர் மீன்பிடிக்கும் தொழில் செய்யாமல், வேறு வேலையில் ஈடுபட்டுஉள்ளனர்.
அவர்கள் தங்களுக்கும் நிவாரணம் வேண்டும் என்று கேட்கின்றனர். அந்த நபர்களை கண்டறிந்து, அவர்களுக்கு நிவாரண நிதி வழங்குவதை தவிர்த்து வருகிறோம்.
நடப்பாண்டில், 1.80 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். மீன்பிடி தடை காலத்திற்குள், தகுதியானவர்களுக்கு மட்டும் நிவாரண நிதி வழங்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.