ADDED : ஜன 03, 2024 11:01 PM
சென்னை:தமிழகத்தில் 2.20 கோடி ரேஷன் கார்டுதாரர்களுக்கு தலா, 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை, கரும்பு அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான அரசாணை, நேற்று முன்தினம் இரவு வெளியானது.
அதில், 1,000 ரூபாய் பரிசு இடம் பெறவில்லை. இது, கார்டுதாரர்களுக்கு ஏமாற்றத்தை அளித்து உள்ளது.
கடந்த 2006 - 11 தி.மு.க., ஆட்சியில் முதல்வராக இருந்த கருணாநிதி, பொங்கலை முன்னிட்டு முந்திரி, திராட்சை, ஏலம், வெல்லம், பச்சரிசி அடங்கிய பரிசு தொகுப்பு வழங்குவதை அறிமுப்படுத்தினார்.
கடந்த 2011 - 2016ல் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, தலா 100 ரூபாய் ரொக்கம், கிலோ பச்சரிசி, சர்க்கரை, 2 அடி கரும்பு ஆகியவை வழங்கப்பட்டன.
பழனிசாமி ஆட்சியில், 2019, 2020ல் பொங்கல் பொருட்களுடன், தலா 1,000 ரூபாய் ரொக்கம் வழங்கப்பட்டது. மிகவும் அதிகமாக, 2021 பொங்கலுக்கு தலா 2,500 ரூபாய் வழங்கப்பட்டது. கடந்த 2022 பொங்கலுக்கு, ரொக்க பணம் இல்லாமல், மளிகை பொருட்கள், கரும்பு உட்பட, 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.
கடந்த ஆண்டு பொங்கலுக்கு, மீண்டும் 1,000 ரூபாய் ரொக்கம் வழங்கப்பட்டது. இந்த ஆண்டில், அது நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னையில் அமைச்சர் உதயநிதி அளித்த பேட்டியில், ''பொங்கல் பரிசு தொகுப்பில் ரொக்கம் வழங்குவது குறித்து, முதல்வர் முடிவு எடுப்பார்,'' என்றார்.