'வாக்கிங் நிமோனியா' இருக்கிறதா, இல்லையா? அரசு டாக்டர்கள் உறுதி; மறுக்கிறது துறை
'வாக்கிங் நிமோனியா' இருக்கிறதா, இல்லையா? அரசு டாக்டர்கள் உறுதி; மறுக்கிறது துறை
ADDED : ஜன 02, 2025 11:32 PM
சென்னை:தமிழகத்தில், 'வாக்கிங் நிமோனியா' காய்ச்சல் பரவி வருவதாக, அரசு டாக்டர்கள் தெரிவிக்கும் நிலையில், புதிய வகை காய்ச்சல் எதுவும் இல்லை என்கிறது பொது சுகாதாரத் துறை.
காலநிலை மாற்றம் காரணமாக, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, காய்ச்சல், சளி உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதில், மார்பு சளியால் ஏற்படும், 'வாக்கிங் நிமோனியா' என்ற பாதிப்பு, 5 முதல் 16 வயது உடையோரை எளிதில் பாதித்து வருவதாக, டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து, சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவக் கல்லுாரி உதவி பேராசிரியர் எஸ்.ஸ்ரீதர் கூறியதாவது:
நிமோனியா என்பது தொண்டை சளி மற்றும் மார்பு சளி என, இரண்டு வகைப்படும். இதில், வாக்கிங் நிமோனியா என்பது, 'ஏடிபிக்கல் நிமோனியா' எனப்படுகிறது.
காய்ச்சலோடு சளியும், இருமலும் இருக்கும். இருமலுடன் வெளியேறும் சளி மஞ்சள் அல்லது பச்சை நிறத்தில் இருக்கும். வயதானவர்களுக்கு தீவிர பாதிப்பை ஏற்படுத்தும்.
வாக்கிங் நிமோனியா பாதித்தவர்களுக்கு சளி, காய்ச்சல் உள்ளுக்குள்ளேயே இருக்கும். அதன் தாக்கம் தெரியாது. அதனால், திடீரென பாதிப்பை ஏற்படுத்தி, மருத்துவமனையில் அனுமதிக்கும் நிலை ஏற்பட்டு விடும். வறட்டு இருமலும், மூச்சுத் திணறலும் அதிகமாக இருக்கும்.
காலநிலை மாற்றம், 'மைக்கோ பிளாஸ்மா' போன்ற பாக்டீரியாவாலும் ஏற்படும். ரத்த பரிசோதனை போன்றவற்றில் கண்டறிய முடியாது. 'சிடி ஸ்கேன்' போன்றவற்றால் மட்டுமே, இவ்வகை பாதிப்பை கண்டறிய முடியும்.
முகக்கவசம் அணிதல், அடிக்கடி கை கழுவுதல், தனிமனித இடைவெளி போன்றவற்றை பின்பற்றுவதன் வாயிலாக, வாக்கிங் நிமோனியா உட்பட, அனைத்து காய்ச்சல் பாதிப்புகளில் இருந்தும் தற்காத்துக் கொள்ள முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறியதாவது:
தமிழகத்தில் வழக்கமான இம்ப்ளூயன்ஸா, டெங்கு, நிமோனியா உள்ளிட்ட காய்ச்சல் பாதிப்புகள் உள்ளன. மற்றப்படியாக, புதிய வகை பாதிப்புகள் இல்லை. மேலும், மழை, குளிர்காலங்களில் ஏற்படும் காய்ச்சல் பாதிப்பு, ஒரு சதவீத அளவுக்குதான் உள்ளது.
'வாக்கிங் நிமோனியா' போன்ற பாதிப்புகளை, பொதுசுகாதாரத்துறை அங்கீகரிக்கவில்லை. தற்போது, தமிழகத்தில் இருப்பது வழக்கமான காய்ச்சல் பாதிப்புகள்தான்.
புதிய பெயர்களைக் கூறி, பொதுமக்களை அச்சுறுத்த வேண்டாம்; மக்களும் பயப்பட வேண்டாம். அதேநேரம், காய்ச்சல் தடுப்புக்கான அனைத்து முன்னேச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்.
இவ்வாறு அவர் கூறினார்.