ADDED : ஜன 16, 2025 07:03 PM
சென்னை:'அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசியதற்காக, கிராம மக்களை கைது செய்வதில் காட்டும் வேகத்தை, வேங்கை வயலில் குடிநீரில் மலம் கலந்த சமூக குற்றவாளிகளை கைது செய்வதில், தி.மு.க., அரசு ஏன் அக்கறை காட்டவில்லை' என, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.
அவரது அறிக்கை:
பொன்முடி மீது சேறு வீசியதாகக் கூறி, விழுப்புரம் மாவட்டம், இருவேல்பட்டு கிராம மக்களை, போலீஸ் துறையினர் வாயிலாக, அடக்குமுறையை ஏவி, வலுக்கட்டாயமாக கைது செய்து, இழுத்து செல்லும் காட்சிகள், பெரும் அதிர்ச்சியையும், மிகுந்த மன வேதனையையும் அளிக்கின்றன. வேங்கை வயல் கிராமத்தில், குடிநீரில் மலம் கலந்த கொடூரர்களை, இரண்டு ஆண்டுகளாகியும் கண்டுபிடிக்க திறனற்ற அரசுக்கு, அமைச்சர் மீது சேறு வீசியதற்காக, அப்பாவி கிராம மக்களை விரட்டி வேட்டையாட வெட்கமாக இல்லையா.
சேறு வீசியவர்களை கைது செய்ய, இத்தனை வேகம் காட்டும் தமிழக போலீஸ்துறை, அதில் நுாற்றில் ஒரு பங்கு வேகத்தையாவது, குடிநீரில் மலம் கலந்த குற்றவாளிகளை கைது செய்வதில் ஏன் காட்டவில்லை.
ஆட்சி அதிகாரம் கையிலிருக்கும் மமதையில், ஆணவப்போக்குடன் மேற்கொள்ளும் கொடுங்கோன்மை செயல்கள் அனைத்திற்கும், தமிழக மக்கள் முடிவுரை எழுதும் நாள், வெகு தொலைவில் இல்லை. அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசியதாக, சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள, இருவேல்பட்டு கிராம மக்கள் அனைவரையும், எவ்வித வழக்கும் பதியாமல், உடனே விடுதலை செய்ய வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.