நிலவிலிருந்து பூமிக்கு மண் மாதிரி எடுத்து வர திட்டம் இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேல் தகவல்
நிலவிலிருந்து பூமிக்கு மண் மாதிரி எடுத்து வர திட்டம் இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேல் தகவல்
ADDED : ஜன 31, 2026 07:00 AM

சென்னை: “சந்திரயான் - 4 திட்டம் வாயிலாக, நிலவில் இருந்து மண் மாதிரிகளை பூமிக்கு எடுத்து வந்து, நிலவு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும்,'' என, இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேல் தெரிவித்தார்.
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை, 12ம் ஆண்டு பட்டமளிப்பு விழா, சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு திறந்த நிலை பல்கலை வளாகத்தில் நேற்று நடந்தது.
பூஜ்ஜிய வேகம் மொத்தம், 77,022 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. அவர்களில் பதக்கங்கள் வென்ற, 119 மாணவ - மாணவியருக்கு, கவர்னர் ரவி பட்டங்களை வழங்கினார்.
விழாவில், இஸ்ரோ சிறப்பு திட்ட இயக்கக இயக்குநர் வீரமுத்துவேல் பேசியதாவது:
ஒரு விண்கலம் பூமியில் இருந்து விண்ணை நோக்கி புறப்படும் போது, கோடிக்கணக்கான மக்கள், அதை கண்டு பாராட்டுகின்றனர். அதன், தொழில்நுட்பம், இயக்கம் மற்றும் துல்லியத்தன்மையை கண்டு வியக்கின்றனர். ஆனால், அதற்கு பின்னால் இருக்கும் கண்ணுக்கு தெரியாத சக்தி, ஆசிரியர்கள் குறித்து, சிலரே நினைப்பர்.
பூமியில் இருந்து, 4 லட்சம் கி.மீ., தொலைவில், நிலவு உள்ளது. பூமி, சூரியனையும், நிலவு, பூமியையும் சுற்றி வருகின்றன. இப்படி, முழு விண்வெளியும் இயங்கிக் கொண்டிருக்கிறது.
அங்கு எதுவும் நிலையானது கிடையாது. இந்த சூழலில், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து, பூஜ்ஜிய விநாடி வேகத்தில் புறப்பட்ட, 'சந்திரயான் -3' விண்கலம், நிலவில் யாரும் தரையிறங்காத தென்துருவப் பகுதியில், மீண்டும் பூஜ்ஜிய வேகத்தில் தரையிறங்க வேண்டும்.
பெரிய சாதனை சரியான வேகத்தில் செல்லாவிட்டால், அந்த விண்கலத்தை இழக்க நேர்ந்திருக்கும். ஆனால், அனைத்தையும் சரியாக கணித்து, மிகப்பெரிய சாதனை படைத்துள்ளோம். இந்த சாதனைக்கு பின்னால், இன்ஜினியரிங், கணிதம், இயற்பியல், நியூட்டன் விதிகள், கெப்லர் விதிகள் போன்றவை உள்ளன. இவற்றை நமக்கு கற்பித்ததே, நம் ஆசிரியர்கள் தான். ஒரு ஆசிரியரின் வெற்றி, அவர் சாதிப்பதில் கிடையாது; அவரது மாணவர்கள் என்னவா மாறினர் என்பதில் தான் உள்ளது.
'சந்திரயான் - 3' திட்டத்தின் வாயிலாக, நிலவில் இந்தியா தரையிறங்கியது. தற்போது, 'சந்திரயான் - 4' திட்டத்தின் வாயிலாக, நிலவில் இருந்து மண் மாதிரிகளை பூமிக்கு எடுத்து வந்து, நிலவு குறித்து ஆராய்ச்சிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டு உள்ளது.
சீர்திருத்தம் பிரதமர் மோடியின், வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கி, இஸ்ரோ பயணித்து வருகிறது.
இந்தியாவிற்கான விண்வெளி நிலையம், இந்திய விண்வெளி வீரர்களை, 2040க்குள் நிலவில் தரையிறக்குவது என, பல்வேறு திட்டங்களை இஸ்ரோ துவக்கி உள்ளது.
விண்வெளி துறையில் அரசு செய்த சீர்திருத்தங்களால், தனியார் துறை, கல்வி நிறுவனங்கள், மாணவர்கள் கூட, விண்வெளி தொழில் முனைவோராக மாற முடியும். இவ்வாறு அவர் பேசினார்.

