ஆதாரமின்றி உத்தரவு பிறப்பிப்பதா? போலி பாஸ்போர்ட் வழக்கில் கேள்வி!
ஆதாரமின்றி உத்தரவு பிறப்பிப்பதா? போலி பாஸ்போர்ட் வழக்கில் கேள்வி!
ADDED : பிப் 01, 2024 12:53 AM

சென்னை:'போலி பாஸ்போர்ட் வழங்கப்பட்ட விவகாரத்தில், எந்த ஆதாரங்களும் இல்லாமல் எப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும்?' என, மனுதாரர் தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
மதுரை போலீஸ்கமிஷனராக டேவிட்சன் தேவாசிர்வாதம் பதவி வகித்த போது, அவரின் மனைவி சுனிதா டேவிட்சன் நடத்தும் டிராவல்ஸ் நிறுவன பரிந்துரையில், போலி ஆவணங்கள் வாயிலாக பலருக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, 'குற்றச்சாட்டு குறித்து மதுரை, 'கியூ பிராஞ்ச்' மூன்று மாதத்துக்குள் விசாரித்து முடிக்க வேண்டும். எஸ்.பி., - சி.ஐ.டி., - ஐ.ஜி., விசாரணையை கண்காணிக்க வேண்டும்' என உத்தரவிட்டது.
தாமதம்
இந்நிலையில், 'போலி பாஸ்போர்ட் வழக்கு தாமதப்படுத்தப்படுகிறது. கூடுதல் டி.ஜி.பி., மீது, துறை ரீதியாக நடவடிக்கை கோரிய மனு மீது எந்த நடவடிக்கையும் இல்லை.
எனவே, முதல்கட்ட விசாரணை நடத்தி, முகாந்திரம் இருந்தால், கூடுதல் டி.ஜி.பி.,க்கு எதிராக நடவடிக்கை எடுக்க, தலைமை செயலருக்கு உத்தரவிட வேண்டும்' என, சென்னை கிழக்கு தாம்பரத்தைச் சேர்ந்த வாராகி என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனு, தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி அடங்கிய முதல் பெஞ்ச் முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, ''41 பேருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, 15 பேர் கைது செய்யப்பட்டுஉள்ளனர்.
''அதில், ஏ.எஸ்.பி., உட்பட ஐந்து காவல் துறை அதிகாரிகளும் அடங்குவர்.மொத்தமாக அரசு அதிகாரிகள் 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆரம்ப கட்ட விசாரணையில், ஐ.பி.எஸ்., அதிகாரிக்கு எதிராக எந்த ஆதாரங்களும் இல்லை,'' என்றார்.
மேல்முறையீடு
மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ''ஐ.பி.எஸ்., அதிகாரி மனைவி, இணை அலுவலகமே நடத்தி உள்ளார். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கோரிய விபரங்களுக்கு எந்த பதிலும் இல்லை,'' என்றார்.
அப்போது, 'ஐந்து போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. கீழ் பணிபுரியும் நபர்கள் செய்யும் தவறுக்காக உயர் அதிகாரி எப்படி பொறுப்பாவார்? தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல் தரவில்லை எனில், மேல்முறையீடு செய்யலாம்.
'எந்த ஆதாரங்களும் இல்லாமல் எப்படி உத்தரவுபிறப்பிக்க முடியும்' என, கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மார்ச் 4ம் தேதிக்கு விசாரணையை தள்ளிவைத்தனர்.