ஐ.டி., ஊழியர் ஆணவக்கொலை வழக்கு: சிபிசிஐடி விசாரணை துவக்கம்
ஐ.டி., ஊழியர் ஆணவக்கொலை வழக்கு: சிபிசிஐடி விசாரணை துவக்கம்
ADDED : ஜூலை 31, 2025 09:39 PM

திருநெல்வேலி : திருநெல்வேலியில் ஐடி ஊழியர் கவின் ஆணவக் கொலை வழக்கு விசாரணையை சிபிசிஐடி போலீசார் துவக்கினர்.
திருநெல்வேலி கே.டி.சி., நகரில் கடந்த 27 ல் ஐ.டி. நிறுவன ஊழியர் கவின் செல்வ கணேஷ் 27, வெட்டிக் கொலை செய்யப்பட்டார். பட்டியல் இன வாலிபரான அவர் வேறு சமுதாய பெண்ணை காதலித்ததால் அப்பெண்ணின் தம்பி சுர்ஜித் 23, இக்கொலையை செய்தார். இதில் சுர்ஜித்தின் பெற்றோரான சரவணன், கிருஷ்ணகுமாரிக்கு தொடர்பு இருக்கலாம் என புகார் கூறப்பட்டதால் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
சரவணன் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பட்டாலியன் போலீசிலும், கிருஷ்ணகுமாரி மணிமுத்தாறு பட்டாலியன் போலீசிலும் எஸ்.ஐ., ஆகவும் உள்ளனர். இருவரும் சம்பவத்தின் போது அங்கு இல்லை. எனினும் கவின் உடலை பிரேத பரிசோதனைக்கு பிறகு திரும்ப பெறாமல் போராட்டங்கள் தொடர்வதால் நேற்று இரவு எஸ்.ஐ., சரவணன் கைது செய்யப்பட்டார்.
சி.பி.சி.ஐ.டி., விசாரணை துவக்கம்
திருநெல்வேலி மாநகர போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில் வழக்கை சி.பி.சி.ஐ.டி., போலீசுக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டதால சிபிசிஐடி டிஎஸ்பி ராஜ்குமார் நவ்ரோஜ் தலைமையிலான குழுவினர் வழக்கு தொடர்பான ஆவணங்களை பெற்றுக் கொண்டனர். கேடிசி நகரில் கவினின் காதலி சுபாஷினி பணியாற்றும் தனியார் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் கேடிசி நகரில் கொலை நடந்த பகுதியில் ஆய்வு நடத்தினர்.