காரில் வெற்றி துரைசாமி பயணம் செய்தது உறுதியானது மூளை சிதறல்கள் யாருடையது என சோதனை
காரில் வெற்றி துரைசாமி பயணம் செய்தது உறுதியானது மூளை சிதறல்கள் யாருடையது என சோதனை
ADDED : பிப் 08, 2024 01:45 AM

சென்னை:'சட்லஜ்' நதியில் சீறிப்பாய்ந்து விபத்துக்குள்ளான காரில், சைதை துரைசாமியின் மகன் வெற்றி பயணம் செய்தது, 'சிசிடிவி' பதிவு வாயிலாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை மாநகரமுன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகனும், திரைப்பட இயக்குனருமான வெற்றி, 45, திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த நண்பர் கோபிநாத், 32, என்பவருடன் ஹிமாச்சல பிரதேசம் சென்றுள்ளார்.
அங்கு, இரு தினங்களுக்கு முன், கோபிநாத்துடன், 'இன்னோவா' காரில், காசாங் நாலா தேசிய நெடுஞ்சாலையில் சென்றுள்ளார்.
காரை, ஹிமாச்சல பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த, தன்ஜின் ஓட்டியுள்ளார். இந்த கார்,'சட்லஜ்' நதியில் சீறி பாய்ந்து விபத்துக்குள்ளானது. சம்பவ இடத்தில், தன்ஜின் பலியானார்.
கோபிநாத் படுகாயத்துடன் மீட்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஆனால், வெற்றி என்ன ஆனார் என்பது மர்மமாகவே உள்ளது. அவர் காரில் பயணித்தாரா என்ற கேள்வியும் எழுந்தது.
சம்பவ இடத்தில், ஹிமாச்சல பிரதேச போலீசார், தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் கடற்படையினர் நேற்றுடன் நான்கு நாட்களாக தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கார் எங்கிருந்து வந்தது. அதில், வெற்றி பயணித்தாரா என்பது குறித்து, ஹிமாச்சல பிரதேச போலீசார், காசாங் நாலா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள, 'சிசிடிவி' பதிவுகளை ஆய்வு செய்தனர்.
அதில், விபத்து நடந்த இடத்திற்கு, 8 கி.மீ., துாரத்திற்கு முன், ஹோட்டல் ஒன்றில், வெற்றி, கோபிநாத் சாப்பிட்டுள்ளனர்.
பின், கோபிநாத் முன்னே செல்ல, அவரை பின் தொடர்ந்து வெற்றி மொபைல் போனில் பேசியபடி செல்வது, காரில் இருவரும் ஏறும் காட்சிகள் பதிவாகி உள்ளன.
இதனால், விபத்து நடந்த காரில் வெற்றி பயணம் செய்தது உறுதியாகி உள்ளது. மேலும், விபத்து நடந்த இடத்தில் வெற்றியின் 'ஆப்பிள்' நிறுவன மொபைல் போன் மீட்கப்பட்டுள்ளது.
இதனால், வெற்றி விபத்தில் சிக்கியதும் உறுதியாகி உள்ளது.
கார் சீறிப்பாய்ந்து உருண்டு வந்த பாதையில், பாறை இடுக்கில் மனித மூளை சிதறிக்கிடக்கிறது.
அது யாருடையது என் பது குறித்து, டி.என்.ஏ., சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது என, தமிழக காவல் துறையின் மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரி ஒருவர் தெரிவித்தார். எனினும் வெற்றியை தேடும் பணி தொடர்ந்து நடக்கிறது.

