பிரிந்து செல்வது கஷ்டமாக இருக்கிறது: பா.ம.க., - ஜி.கே.மணி விரக்தி
பிரிந்து செல்வது கஷ்டமாக இருக்கிறது: பா.ம.க., - ஜி.கே.மணி விரக்தி
ADDED : பிப் 21, 2026 06:46 AM
சென்னை: ''ஐந்து ஆண்டுகளாக பழகிய, எம்.எல்.ஏ.,க்களை பிரிந்து செல்வது கஷ்டமாக இருக்கிறது,'' என, பா.ம.க., எம்.எல்.ஏ., - ஜி.கே.மணி தெரிவித்தார்.
சட்டசபையில் நேற்று அவர் பேசியதாவது:
முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன், 'இது எனது அரசல்ல; நமது அரசு' என, சொன்னார். அந்த வார்த்தையை கேட்டு, நான் உவகை கொண்டேன்; அது வார்த்தை மட்டுமல்ல.
எனது பென்னாகரம் தொகுதியாக இருந்தாலும், எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, நயினார் நாகேந்திரன், செல்வப்பெருந்தகை தொகுதியாக இருந்தாலும், அந்த தொகுதிகளுக்கு கேட்டதை எல்லாம், முதல்வர் ஸ்டாலின் கொடுத்திருக்கிறார். அவருக்கு எனது நன்றி.
கட்சி, கொள்கைகளில் வேறுபாடு இருந்தாலும், சட்டசபையில் ஐந்து ஆண்டுகளாக ஒன்றாக பழகியிருக்கிறோம். இப்போது பிரிந்து செல்கிறோம். மனது கஷ்டமாகத்தான் இருக்கிறது. மீண்டும் யார் வருவர் என்பதை, அந்தந்த தொகுதி மக்கள்தான் தீர்மானிப்பர். அதை குற்றச்சாட்டாக சொல்லவில்லை. யாருக்கு வாய்ப்பிருந்தாலும், வெற்றி கிட்டும்.
எதிரும், புதிருமாக இருந்தாலும், எல்லோரையும் ஏற்றுக்கொண்டு அரவணைத்த முதல்வருக்கு நன்றி. நாங்கள் நீண்டகாலமாக கேட்ட, வேளாண் பட்ஜெட்டை, சபையில் தாக்கல் செய்ததற்கு நன்றி.
இவ்வாறு பேசினார்.
