'துணைவேந்தர் நியமன மசோதாவை ஜனாதிபதி திருப்பி அனுப்பியது நல்லது'
'துணைவேந்தர் நியமன மசோதாவை ஜனாதிபதி திருப்பி அனுப்பியது நல்லது'
ADDED : டிச 31, 2025 07:35 AM

சென்னை: 'பல்கலை துணைவேந்தர் நியமன மசோதாவை ஜனாதிபதி திருப்பி அனுப்பியது வரவேற்கத்தக்கது' என, தமிழக பா.ஜ., துணைத் தலைவர் கனகசபாபதி தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
தி.மு.க., ஆட்சியில், தமிழக கல்வித் துறை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. பெரும்பாலான பல்கலைகள், நிதியின்றி தடுமாறுகின்றன.
இதனால், பல மாதங்களாகவே, பல்கலைகள் மாத சம்பளம் கொடுக்கவே தடுமாறி வருகின்றன.
பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் ஓய்வு பெற்று, பல மாதங்கள் கடந்த பின்பும், சட்டப்படி கிடைக்க வேண்டிய பணபலன்கள் அவர்களுக்கு கிடைப்பதில்லை.
சென்னை பல்கலையில், கடந்த மே மாத சம்பளம், ஆசிரியர்களின் போராட்டத்துக்கு பின், தாமதமாக வழங்கப்பட்டது.
அங்கு, பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு, அண்மையில் நீதிமன்றம் தலையிட்ட பின்பே, சேர வேண்டிய தொகை வழங்கப்பட்டது.
தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், 50 அரசு கல்லுாரிகளை துவக்கியுள்ளது. ஆனால், அவற்றில் முழு நேர ஆசிரியர் ஒருவர் கூட இல்லை.
தி.மு.க., அரசின் விருப்பப்படி, பல்கலை மானியக்குழுவின் வழிகாட்டு முறைகளை ஏற்றுக் கொள்ளாமல், துணைவேந்தர் நியமனங்களுக்கு, கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை.
அதனால், பல்கலை வேந்தராக, கவர்னருக்கு பதில் முதல்வர் இருக்கும் வகையில், 2022ல் சட்டசபையில் மசோதாவை நிறைவேற்றினர். தற்போது, அந்த மசோதாவை, ஜனாதிபதி மாநில அரசுக்கே திருப்பி அனுப்பியுள்ளார்.
இதன் வாயிலாக, தி.மு.க.,வின் பிடியில் இருந்து, துணைவேந்தர் நியமனங்கள் காப்பாற்றப்பட்டு உள்ளன. எனவே, ஜனாதிபதி செயல்பாடு வரவேற்கத்தக்கது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

