'விழித்தெழுந்த நொடியில் அது ஒருபோதும் நிஜமானதல்ல' ஜவஹர்லால் பல்கலையில் சிருங்கேரி ஜகத்குரு அருளுரை
'விழித்தெழுந்த நொடியில் அது ஒருபோதும் நிஜமானதல்ல' ஜவஹர்லால் பல்கலையில் சிருங்கேரி ஜகத்குரு அருளுரை
ADDED : நவ 22, 2025 07:06 AM

புதுதில்லியில் விஜய யாத்திரை மேற்கொண்டுள்ள சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீட ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதீ சுவாமி, நவ.,19ம் தேதி ஜவஹர்லால் நேரு பல்கலை வளாகத்தில் அமைந்துள்ள, வித்யாரண்யா கல்வி மற்றும் மேம்பட்ட ஆய்வுகள் நிறுவனத்திற்கு (VIKAS) விஜயம் செய்து அருளினார்.
ஜகத்குருவுக்கு, பல்கலை துணைவேந்தர் பேராசிரியர் சாந்திஸ்ரீ துாளிப்புடி பண்டிட், நிர்வாகத்தினர் மற்றும் பேராசிரியர்கள் உட்பட திரளானோர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். 2024 பிப்., மாதம், பல்கலை நிர்வாகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், 12வது ஜகத்குரு ஸ்ரீ வித்யாரண்யர் மஹா ஸ்வாமிஜியின் அழகான திருவுருவச் சிலையை வளாகத்தில் நிறுவதற்காக அளித்தது.
சிலையை பார்வையிட்ட பின், ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதீ சுவாமி ஆற்றிய அருளுரை:
நாம் உண்மையை அறியாதிருக்கும் வரை மட்டுமே இருமை நிலை (Duality) குறித்த நமது அனுபவம் நீடிக்கும். ஒரு கனவு, நாம் கனவு காணும் நிலையில் இருக்கும் வரை மட்டுமே நிஜமாகத் தெரிகிறது.
நாம் விழித்தெழுந்த நொடியில், அது ஒருபோதும் நிஜமானதல்ல என்பதை உடனடியாக உணர்ந்து கொள்கிறோம்.
அதேபோல, நான்/ எனது எனும் அறிவுக்கு நாம் விழித்தெழும் வரை மட்டுமே இருமை நிலை நிஜம் போல் தோன்றுகிறது. உண்மையான புரிதல் உதயமாகும்போது, இந்த மாயை கரைந்து போகிறது, கனவு விழித்தவுடன் கரைவது போல. அறிவு மட்டும் போதாது; அது சம்ஸ்காரம் எனும் சரியான நடத்தை, சரியான மதிப்புகள் மற்றும் தர்மத்துடன் இணைந்த வாழ்க்கை ஆகியவைகள் ஆதரிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அருளுரை வழங்கினார்.
முன்னதாக, ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹா சன்னிதானத்தின், வஜ்ரோத்ஸவ பாரதீ உத்சவத்தின் போது வெளியிடப்பட்ட ஸ்ரீ ஆதிசங்கரரின் பிரம்ம சூத்திர பாஷ்யம், ஸ்ரீமத் பகவத் கீதா பாஷ்யத்தின் பிரதிகளை பல்கலை நுாலகத்துக்கு வழங்கினார். தொடர்ந்து, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் டில்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு அருளுரை வழங்கினார்.
- நமது நிருபர் -

