பா.ஜ., தூண்டுதலுக்கு அமலாக்கத்துறை அடிபணிவது நாட்டுக்கு நல்லதல்ல: ரகுபதி
பா.ஜ., தூண்டுதலுக்கு அமலாக்கத்துறை அடிபணிவது நாட்டுக்கு நல்லதல்ல: ரகுபதி
ADDED : மார் 20, 2025 08:22 PM
சென்னை:'தி.மு.க., அரசை துரும்பளவு கூட பா.ஜ.,வால் அசைத்துப் பார்க்க முடியாது' என, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:
அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கிலேயே, உச்ச நீதிமன்றத்தால் கடும் கண்டனத்தை எதிர்கொண்ட அமலாக்கத் துறை, டாஸ்மாக் நிறுவத்தில் ரெய்டு நடத்திய விவகாரத்தில் தற்போது மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு ஆளாகியிருக்கிறது.
'இரவில் சோதனை நடக்கவில்லை; அனைவரும் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டனர்; அரசு ஊழியர்கள் யாரையும் நாங்கள் சிறைபிடிக்கவில்லை; யாரையும் துன்புறுத்தவில்லை' என, உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை சொன்னபோது, 'பொய் சொல்ல வேண்டாம்' என, நீதிமன்றம் கண்டித்திருக்கிறது.
வடக்கே அமலாக்கத் துறையை வைத்து பா.ஜ.,விற்கு ஆள் பிடித்த பார்முலாவை, இங்கே செய்து பார்க்கலாம் எனக் கணக்கு போடுகிறது. ஆனால், முதுகெலும்பில்லாத கோழைகள் வேண்டுமானால், பா.ஜ.,வின் சித்து விளையாட்டிற்குப் பயந்து ஆதரித்து அடிபணியலாம். ஆனால், ஒருகாலமும் தி.மு.க., அரசை துரும்பளவு கூட அசைத்துப் பார்க்க முடியாது.
முதல்வரின் தலைமையில், தொகுதி மறுவரையறை நடவடிக்கைக்கு எதிராக, பல்வேறு மாநில முதல்வர்களும், முக்கிய அரசியல் தலைவர்களும் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம், பா.ஜ.,வின் துாக்கத்தைக் கெடுத்திருக்கிறது. அதனால்தான், அமலாக்கத் துறையை வைத்து மத்திய பா.ஜ., மிரட்டுகிறது.
அமலாக்கத் துறையை புனிதமான விசாரணை அமைப்பாக காட்டி வந்த பா.ஜ.,வின் பிம்பம், தமிழகத்தில் தான் முதல்முறையாக, துடைத்தெறியப்பட்டது. திண்டுக்கல் டாக்டரிடம், 20 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்று மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கைதானார். அமலாக்கத்துறை பா.ஜ.,வோடு கூட்டு வைத்து, அக்கட்சியின் தூண்டுதலுக்கு துணை போய்க் கொண்டிருப்பது நாட்டிற்கு நல்லதல்ல.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.