பன்னீர்செல்வத்தை கட்சியில் சேர்க்க சாத்தியமே இல்லை: பழனிசாமி
பன்னீர்செல்வத்தை கட்சியில் சேர்க்க சாத்தியமே இல்லை: பழனிசாமி
ADDED : மார் 27, 2025 09:07 PM
துாத்துக்குடி:''பிரிந்தது பிரிந்ததுதான். பன்னீர்செல்வத்தை மீண்டும் கட்சியில் சேர்க்க சாத்தியமே கிடையாது,'' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கூறினார்.
துாத்துக்குடி விமான நிலையத்தில், அவர் அளித்த பேட்டி:
பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதற்காக மத்திய அரசு, தமிழகத்துக்கு கொடுக்க வேண்டிய நிதி நிலுவையை உடனடியாக கொடுக்க வேண்டும் என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து வலியுறுத்தினேன்; மனுவும் அளித்தேன்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில், மத்திய அரசிடம் இருந்து மாநில அரசிற்கு வர வேண்டிய நிதி தாமதப்படுத்தப்படுகிறது. அதையும் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளோம்.
அதுமட்டுமல்ல, தமிழகத்தில் இருமொழிக் கொள்கை தொடர வேண்டும் என்ற அ.தி.மு.க.வின் நிலைப்பாடு தொடர வேண்டும் எனவும் அமித் ஷாவிடம் வலியுறுத்தி சொல்லி உள்ளேன்.
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், கட்சியில் இருந்து பிரிந்து சென்றது சென்றதுதான். இனி, அவரை கட்சியில் சேர்ப்பதற்கான சாத்தியம் கிடையாது. கட்சியை எதிரிகளிடம், அடமானம் வைத்ததை தொண்டர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
தொண்டர்கள் கோவிலாக கருதும், கட்சியின் தலைமை கழகத்தை ரவுடிகளுடன் சென்று உடைத்தவர் பன்னீர்செல்வம். அவர், கட்சியில் இருப்பதற்கு கொஞ்சம் தகுதி இல்லாதவர். அப்படிப்பட்டவரை, மீண்டும் கட்சியில் இணைத்துக் கொள்ள வாய்ப்பே இல்லை. ஆனால், கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்கள் பலரும், மீண்டும் அ.தி.மு.க.,வில் இணைந்து கொண்டுதான் இருக்கின்றனர். மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு, அவர்கள் மீண்டும் கட்சியில் இணைகின்றனர். ஆனால், பன்னீர்செல்வத்தை மட்டும் மன்னிக்கவே முடியாது.
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை டில்லி சென்றுள்ளது குறித்து எனக்கு எதுவும் தெரியாது.
சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 11 மாதங்கள் உள்ளது. இப்போது எந்த செய்தி சொன்னாலும் அது நிலைக்காது. யாருடன் கூட்டணி அமைத்தாலும், அது குறித்து பத்திரிகையாளர்களை அழைத்து நிச்சய்ம் சொல்வோம்.
தி.மு.க.,வை தவிர, மற்ற எந்த கட்சியும் எங்களுக்கு எதிரி கிடையாது. தேர்தல் நேரத்தில் ஒத்தக் கருத்துடைய கட்சிகளை கூட்டணியில் இணைத்துக் கொள்வோம்.
தமிழகத்தில் போதை பொருள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கு காவல்துறை மீது அச்சம் எதுவுமில்லை. அதனாலேயே, கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றங்கள் தொடர்ச்சியாக நடக்கின்றன.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அமலாக்கத் துறை சோதனை நடத்தியதில், டாஸ்மாக்கில் 1000 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதன்மீது மத்திய அரசு கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றம் இழைத்தோரை விடக் கூடாது.
'1000 ரூபாய் கொடுப்பதுபோல கொடுத்து, 1000 கோடி அமுக்கிய அந்த தியாகி யார்?' என தமிழக முழுதும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அந்த யாரை, நீங்கள் தான் கண்டுபிடிக்க வேண்டும். கண்டுபிடித்ததும், அதை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும்.
இவ்வாறு பழனிசாமி கூறினார்.

