'மரவள்ளியில் எத்தனால் தயாரிக்க சர்க்கரை ஆலையில் சாத்தியமில்லை'
'மரவள்ளியில் எத்தனால் தயாரிக்க சர்க்கரை ஆலையில் சாத்தியமில்லை'
UPDATED : மார் 19, 2025 05:41 AM
ADDED : மார் 19, 2025 12:09 AM

சென்னை:''சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில், மக்காச்சோளம், மரவள்ளி மற்றும் அரிசியில் இருந்து, எத்தனால் தயாரிக்கும் திட்டம் அரசிடம் இல்லை,'' என, அமைச்சர் ராஜேந்திரன் கூறினார்.
சட்டசபையில் நடந்த விவாதம்:
தி.மு.க., - ராமலிங்கம்: சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில், கரும்பு பாகு கழிவில் இருந்து, எத்தனால் உற்பத்தி செய்யப்படுகிறது.
கரும்பில் இருந்து நேரடியாக எத்தனால் தயாரிக்க வேண்டும். மரவள்ளி, மக்காச்சோளம் மற்றும் அரிசியில் இருந்து எத்தனால் தயாரித்தால், நஷ்டத்தில் இயங்கும் ஆலையை லாபத்திற்கு கொண்டு வர முடியும்.
அமைச்சர் ராஜேந்திரன்: சேலம் கூட்டுறவு ஆலை, 1964ல் துவங்கப்பட்டது. அங்கு கரும்பு பாகு கழிவில் இருந்து, எத்தனால் தயாரிக்கும் வசதி உள்ளது. அங்கு அரிசி, மரவள்ளி, மக்காச்சோளத்தில் இருந்து எத்தனால் தயாரிக்க வேண்டும் என்றால், அதற்கு தனியாக இயந்திரம் அமைக்க வேண்டும். அதற்கான சாத்தியக்கூறு இப்போது இல்லை.
கரும்பில் இருந்து சர்க்கரை, மொலாசஸ், எரிசாராயம், எத்தனால், நியூட்ரல் ஆல்கஹால் உற்பத்தி செய்யப்படுகிறது. நேரடியாக கரும்பில் இருந்து எத்தனால் தயாரித்தால், சர்க்கரை உற்பத்தி பாதிக்கும்.
தற்போது, சேலம் சர்க்கரை ஆலையில் இருந்து ரேஷனுக்கு தேவையான சர்க்கரை வழங்கப்படுகிறது. வரும் காலத்தில் சர்க்கரை உற்பத்தி அதிகமானால், கோரிக்கை பரிசிலிக்கலாம்.
இவ்வாறு விவாதம் நடந்தது.