பட்டமளிப்பு விழாவை அமைச்சர்கள் புறக்கணிப்பது சரியல்ல: எச்.ராஜா
பட்டமளிப்பு விழாவை அமைச்சர்கள் புறக்கணிப்பது சரியல்ல: எச்.ராஜா
ADDED : அக் 29, 2024 06:59 AM

காரைக்குடி: ''பல்கலை பட்டமளிப்பு விழாவில் அமைச்சர்கள் தங்களது எண்ணங்களை அறிவுரைகளை பேசலாம். விழாவை புறக்கணிப்பது சரியில்ல,'' என, சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பா.ஜ., மாநில ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச். ராஜா தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பயணிக்கும் துாரம் இன்னும் நிறைய உள்ளது. ஒரு நாள் தான் ஆகிறது. எந்த பரபரப்பும் இல்லை. அவர் சிந்தனையிலேயே குழப்பமாக உள்ளார்( ஐடியலாஜிக்கல் கன்பியூஸ்டு பெர்ஷன்). கொள்கை ரீதியாக குழப்பத்தில் உள்ளவர்கள் தெளிவான அரசியலை கொடுக்க முடியாது. அநாகரீக அரசியலுக்கு குத்தகைதாரர்கள் திராவிட கட்சியினர் தான். ஈ.வே.ராமசாமி மேடையில் பேசாத அநாகரீக பேச்சா. ஆனால் அவரது போட்டோ விஜய் மேடையில் வைக்கப்பட்டுள்ளது.
விஜயகாந்த் அரசியலில் ஏற்படுத்தாத தாக்கமா. நடிப்புக்கென்று பிறந்த சிவாஜி கணேசன் கூட அரசியலில் தாக்கம் ஏற்படுத்த முடியவில்லை. கவர்னர் தேவை இல்லை என்ற விஜய்யை, அரசியலுக்குத் தேவையில்லை என்று மக்கள் முடிவு செய்துவிட்டால் என்ன செய்வது. தி.மு.க., சொல்வதை நாமும் சொன்னால் தான் அரசியலில் இருக்க முடியும் என்பதற்காக சிலர் அவர்கள் பேசியதையே பேசுகின்றனர்.
பட்டமளிப்பு விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் செழியன் கலந்து கொள்வதில்லை. தங்களது மாணவர்கள் பட்டம் பெறுவதாக கல்வி அமைச்சர்கள் எண்ண வேண்டும். தங்களது கருத்துக்களை அறிவுரைகளை அங்கு வந்து பேசலாம். பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பது சரியல்ல. வெறுப்பு அரசியலின் ஆணிவேர் திராவிட சித்தாந்தம். திராவிடம் என்பது இடத்தை குறிக்கும். இனத்தை அல்ல என்றார்.

