மின்னணு முறையில் உத்தரவாத தொகை அரசு 'டெண்டர்' எடுக்க இனி கட்டாயம்
மின்னணு முறையில் உத்தரவாத தொகை அரசு 'டெண்டர்' எடுக்க இனி கட்டாயம்
ADDED : ஜூலை 12, 2025 07:55 PM
சென்னை:தமிழகத்தில், அரசு துறைகளின் பணிகளை செய்ய, 'டெண்டர்' எடுப்பவர்கள், அதற்கான, இ.எம்.டி., எனப்படும், உத்தரவாத தொகையை, இனி மின்னணு வங்கி உத்தரவாதமாக செலுத்துவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
அரசு பணிகளுக்கான டெண்டர்களில் பங்கேற்க, பதிவு செய்த ஒப்பந்ததாரர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதில், குறிப்பிட்ட பணியில் அல்லது பொருட்கள் வழங்குவதில், சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் உறுதியாக செயல்படுவார் என்பதற்கு, அரசுக்கு உத்தரவாதம் தேவை.
இதற்காக, இதுபோன்ற டெண்டர்களில் பங்கேற்போர், ஒரு குறிப்பிட்ட தொகையை உத்தரவாதமாக செலுத்த வேண்டும் என்ற நடைமுறை உள்ளது.
சம்பந்தப்பட்ட துறை தொடர்பான கணக்கில், இத்தொகையை ஒப்பந்ததாரர் செலுத்தும் முறை இருந்து வருகிறது. சில துறைகள், இத்தொகையை வங்கி உத்தரவாத சான்றிதழாக பெற்று வருகின்றன.
இதுபோன்ற சான்றிதழ்கள் அளிக்கப்படும் நிலையில், அதில், போலிகள் நுழையவும், முறைகேடுகள் செய்யவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதனால், மின்னணு முறையில் வங்கி உத்தரவாதம் அளிக்கும் வசதியை கொண்டு வர, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக, நிதித்துறை பிறப்பித்துள்ள அரசாணை:
தமிழகத்தில், 2026 ஜன., 1 முதல், 10 கோடி ரூபாய்க்கு மேற்பட்ட டெண்டர்களில் பங்கேற்போர், அதற்கான உத்தரவாத தொகையை, மின்னணு முறை வங்கி உத்தரவாதமாக மட்டுமே தாக்கல் செய்ய வேண்டும்.
டெண்டர்கள் அறிவிப்பு வெளியாகும், tntenders.gov.in என்ற இணையதளத்தில் இதற்கான வசதிகள் செய்யப்படும்.
இதை தொடர்ந்து, 2026 ஜூன் 1 முதல் மதிப்பு வரம்பு இன்றி, அனைத்து டெண்டர்களிலும் உத்தரவாதத் தொகையை, ஒப்பந்ததாரர்கள் மின்னணு முறை வங்கி உத்தரவாதமாக மட்டுமே தாக்கல் செய்ய வேண்டும்.
இதனால், இனி உத்தரவாத தொகை ரொக்கமாக அல்லது வாங்கி தரும் எழுத்துப்பூர்வ சான்றிதழ்களாக பெறப்பட மாட்டாது.
அதேநேரம், பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரரிடம் இருந்து, பாதுகாப்பு வைப்புத்தொகை விஷயத்தில், தற்போது உள்ள நடைமுறையே தொடரும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.