டெங்குவால் 20,138 பேர் பாதிப்பு மேலும் அதிகரிக்கும் என தகவல்
டெங்குவால் 20,138 பேர் பாதிப்பு மேலும் அதிகரிக்கும் என தகவல்
ADDED : நவ 07, 2024 11:52 PM
சென்னை:தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால், இதுவரை, 20,138 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இம்மாதம் மேலும் அதிகரிக்கும் என்றும், டெங்குவால் ஏற்படும் இறப்புகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கை:
இம்மாதமும், அடுத்த மாதமும் டெங்கு பாதிப்பு அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. பருவமழை பெய்து வருவதால், காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. கடந்த ஜனவரி முதல் நவம்பர், 5ம் தேதி வரை, 20,138 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர்; பெரும்பாலானோர் குணமடைந்து உள்ளனர்.
இதில், உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை பெறாத, செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி உட்பட, எட்டு பேர் உயிரிழந்துள்ளனர். டெங்கு பரவலை தடுக்கவும், இறப்புகளை குறைக்கவும் அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
கடந்த 2022ம் ஆண்டு, 30,425 பேரும்; 2023ல், 29,401 பேரும் டெங்குவால் பாதிக்கப்பட்டனர். அவற்றை ஒப்பிடுகையில், இந்தாண்டு டெங்கு பாதிப்பு குறைந்துள்ளது. டெங்கு பாதிப்பை கண்காணிப்பதில் அரசு விழிப்புடன் உள்ளது. அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், 24 மணி நேர காய்ச்சல் சிகிச்சை மையங்கள் செயல்படுகின்றன.
டெங்கு பரிசோதனை மையங்கள், 35ல் இருந்து, 4,031 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன. போதியளவில் கொசு ஒழிப்பு மருந்துகள், தடுப்பு பணியாளர்கள் உள்ளனர். உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து, டெங்கு பரவல் மற்றும் இறப்புகள் குறைக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

