புதிய மாநகராட்சிகளில் 'டவுன் சர்வே' இப்போதைக்கு இல்லை என தகவல்
புதிய மாநகராட்சிகளில் 'டவுன் சர்வே' இப்போதைக்கு இல்லை என தகவல்
ADDED : நவ 08, 2024 11:10 PM
சென்னை:புதிதாக உருவாக்கப்பட்ட மாநகராட்சிகள், நகராட்சிகளில், இப்போதைக்கு, 'டவுன் சர்வே' எனப்படும், நகர்ப்புற நில அளவைப் பணிகள் மேற்கொள்ளப்பட வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.
தமிழகத்தில், 25 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் உள்ளன.
கடந்த, 20 ஆண்டுகளுக்கு முன் நகராட்சிகளாக, மாநகராட்சிகளாக இருந்த பகுதிகளில் மட்டும், நகர்ப்புற நில அளவைப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
நில அளவை எண்
இங்குள்ள நிலங்கள் குடியிருப்பு, வணிகம், தொழில் பகுதிகளாக வகைப்படுத்தப்பட்டு, டி.எஸ்., எனப்படும், நகர்ப்புற நில அளவை எண் ஒதுக்கப்படும்.
ஆனால், 10 ஆண்டுகளில் மாநகராட்சிகளின் எண்ணிக்கை, 25 ஆக உயர்ந்துள்ள நிலையில், நகர்ப்புற நில அளவை பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படவில்லை.
இதனால், பெரும்பாலான மாநகராட்சிகளில், ஏற்கனவே, 20 ஆண்டுகளுக்கு முன் நகராட்சியாக இருந்த பகுதிகளின் நிலங்களுக்கு மட்டுமே, நகர்ப்புற நில அளவை எண்கள் பெறப்பட்டுள்ளன. புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் உள்ள நிலங்கள், பழைய சர்வே எண்ணுடன் தான் இருக்கின்றன.
இந்த நிலங்கள் நஞ்சை, புஞ்சை வகைப்பாட்டில் தான் இன்னும் இருக்கின்றன.
இந்த நிலங்களில் வீடு கட்டும்போது, பட்டா குறித்த விபரங்களை ஆய்வு செய்யும் நிலையில், நில வகைப்பாடு தொடர்பாக பிரச்னை எழுகிறது. எனவே, அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகளில் நகர்ப்புற நில அளவைப் பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்து உள்ளது.
எல்லை பிரச்னை
இதுகுறித்து, நில அளவைத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தமிழகத்தில், நத்தம் நிலங்கள் குறித்த சர்வே பணிகள் முடிந்தாலும், அது தொடர்பான எல்லை, அளவு பிரச்னைகள் இன்னும் நிலுவையில் உள்ளன.
பகுதி வாரியாக இப்பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
இது தொடர்பான பணிகள் முழுமையாக முடிந்த பின்தான், நகர நில அளவைப் பணிகளை மேற்கொள்ள முடியும். அதே நேரத்தில், மாநகராட்சிகள் அதிகரித்துள்ளதால், படிப்படியாகத்தான் இப்பணிகளை மேற்கொள்ள முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.