இயற்கையை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை: பசுமை தீர்ப்பாயம்
இயற்கையை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை: பசுமை தீர்ப்பாயம்
UPDATED : ஜூலை 17, 2025 02:32 AM
ADDED : ஜூலை 16, 2025 09:45 PM

சென்னை:'காடுகள், நீர்நிலைகள், மலைகள் போன்றவற்றை பாதுகாக்க வேண்டியது, அரசின் கடமை' என, தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பளித்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் தாலுகா, பெருநாவலுார் கிராமத்தை சேர்ந்தவர் கூத்தபெருமாள். இவர் தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்த மனு:
பெருநாவலுாரில் உள்ள கண்மாய், கிராம மக்களின் விவசாயம் மற்றும் குடிநீர் ஆதாரமாக உள்ளது. இந்த கண்மாய்க்கு நீர் வரும் வழித்தடங்கள், அரசியல் மற்றும் பணபலம் படைத்தவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இதனால், கண்மாய்க்கு நீர்வரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, 10 ஆண்டுகளுக்கும் மேலாக, சம்பந்தப்பட்ட அரசு துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, பெருநாவலுார் கண்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதை விசாரித்த தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் அளித்த தீர்ப்பு:
காடுகள், நீர் நிலைகள், மலைகள் உள்ளிட்டவை, இயற்கையின் கொடை என்பதை, அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். மக்களுக்கு ஆரோக்கியமான சூழலை உறுதி செய்ய, இவை பாதுகாக்கப்பட வேண்டும்.
கண்மாய் போன்ற நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டு, பயன்பாட்டில் இல்லாததை அறிந்த பின், பொது மக்கள் நலனுக்காகவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், அதை மீட்டெடுத்து, பராமரிக்க வேண்டியது, வருவாய் மற்றும் நீர்வளத்துறையின் கடமை.
நீர்நிலைகள் போன்ற பொது சொத்துக்களை ஆக்கிரமிக்க, அரசு அனுமதிக்க கூடாது.
வருவாய் மற்றும் நீர்வளத்துறை தங்கள் நீர் நிலைகள், கால்வாய்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அவ்வப்போது ஆய்வு செய்து, ஆக்கிரமிப்புகள் இருந்தால் உடனே அகற்ற வேண்டும். இதன் வாயிலாக, இயற்கை வளங்களின் பாதுகாவலன் என்பதை, அரசு உறுதிப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.