ADDED : நவ 19, 2025 06:12 AM

திண்டுக்கல்: ''தேர்தலில் தவறுகள் நடப்பது உண்மை. அதை மறுக்க முடியாது''என தே.மு.தி.க., பொதுச்செயலாளர் பிரேமலதா கூறினார்.
திண்டுக்கல்லில் அவர் கூறியதாவது: ஆளுங்கட்சி வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி விட்டோம் என கூறுவார்கள். ஆனால் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளில் எத்தனை நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது கேள்விக்குறி. அதிகமான தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என கூறுவது அந்தந்த கட்சிகளின் நம்பிக்கை. அதை குறை சொல்லக்கூடாது. தே.மு.தி.க., கூட்டணி அமைக்கும் கட்சியே இந்த முறை வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். எஸ்.ஐ.ஆர்., தமிழகம் முழுவதும் பேசப்படுகிறது.
ஓட்டுகள் திருடப்படுகிறது, நீக்கப்படுகிறது என தகவல் வருகிறது. தேர்தல் நேரத்தில் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் வருவது முதல்முறை அல்ல. தேர்தலில் தவறுகள் நடப்பது உண்மை. அதை மறுக்கமுடியாது. ஆதாரப்பூர்வமாக தேர்தல் அதிகாரியை சந்தித்து முறையிட்டுள்ளோம். நேர்மையான முறையில் தேர்தல் நடக்கவேண்டும் என்பது தே.மு.தி.க.வின் நிலைப்பாடு. எஸ்.ஐ.ஆர்., பணி சுமை காரணமாக தற்கொலை என்பதை கடந்துபோக முடியாது. இதுகுறித்து ஆராய வேண்டும்.
இந்தியாவில் தற்கொலை செய்த 2 பேருக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். பிரதமர் மோடி விவசாய மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கோவைக்கு வருவதை விவசாயிகளுக்கான பெருமையாக பார்க்கிறேன். தே.மு.தி.க., விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் பக்கப்பலமாக இருப்போம். கூட்டணியில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். விஜயகாந்த் குரு பூஜை, கடலுார் மாநாடு அதற்கான பணிகளை செய்கிறோம். கட்சி வளர்ச்சி, தேர்தலுக்காக தயாராகிறோம். தமிழகத்தில் சட்ட ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது.
கொலை, பாலியல் வன்கொடுமை, லாக்கப் மரணம், டாஸ்மாக், போதை கலாசாரம், வேலைவாய்ப்பின்மை என பல்வேறு பிரச்னைகள் உள்ளது. ஆளுங்கட்சிதான் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ. உடனான சந்திப்பு நட்பு ரீதியானது. லாரியில், நெல்மூடைகள் இருக்கும்போது நனைந்து முளைக்க தொடங்கி இருக்கிறது. பயிர்கள் கண் முன்னே வீணாவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நெல் ஈரப்பத கொள்முதல் சதவீதத்தை உயர்த்த வேண்டும்.
விளைச்சல் கிடைக்கும் அனைத்து நெல் மூடைகளையும் பாதுகாப்பாக வைப்பதற்கு தானிய சேமிப்பு கிட்டங்கி இடத்தை மத்திய, மாநில அரசுகள் இணைந்து உருவாக்க வேண்டும். மக்கள் நல பணியாளர்கள் சென்னையில் தொடர் போராட்டம் நடத்தினர். ஆசிரியர்கள், செவிலியர்கள், மீனவர்கள், மருத்துவர்கள் அனைத்து இடங்களிலும் கோரிக்கை, ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடக்கிறது.
அவர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும். மக்கள் அனைவரும் தங்களின் ஓட்டுரிமையை சரிபார்க்க வேண்டும். யாரும் யாருடைய ஓட்டையும் நீக்க முடியாது. யாரையும் குறை சொல்ல முடியாது. ஆதார் நமது அடையாளம் என்றால் வாக்குரிமையும் நமது அடையாளம் என்றார்.

