தெருக்களுக்கு கருணாநிதி பெயர் வைப்பது தவறு: இபிஎஸ்
தெருக்களுக்கு கருணாநிதி பெயர் வைப்பது தவறு: இபிஎஸ்
ADDED : அக் 09, 2025 10:39 PM

நாமக்கல்: '' தெருக்களுக்கு கருணாநிதி பெயர் வைப்பது தவறு. மீண்டும் நாங்கள் ஆட்சி அமைந்ததும் இந்த அரசாணை ரத்து செய்யப்படும்,'' என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கூறியுள்ளார்.
'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' சுற்றுப்பயணத்தில் நாமக்கல்லின் முல்லை நகரில் இபிஎஸ் பேசியதாவது: இபிஎஸ் பிரசார வாகனத்தைச் சுற்றிலும் அதிமுக கொடியுடன் தவெக கொடியும் அதிகமாக தென்பட்டது எல்லோரையும் ஆச்சர்யப்படுத்தியது. பெருந்திரளான மக்கள் கூட்டத்திற்குள் கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் தூரம் நீந்தி வந்த இபிஎஸ், திறந்தவெளி மைதானத்தில் குழுமியிருந்த மக்கள் மத்தியில் எழுச்சியுரை ஆற்றினார்.
காவல்துறை இன்று ஓரளவுக்கு பாதுகாப்பு கொடுத்தார்கள். இந்த பாதுகாப்பை ஏற்கெனவே கொடுத்திருந்தால் 41 உயிர்களை இழந்திருக்க வேண்டிய அவசியமில்லை. 171வது தொகுதியில் இப்போது பேசுகிறேன். கரூர் சம்பவம் நடந்த பின்னர்தான் போலீஸ் பாதுகாப்பு கொடுக்கிறது. முன்பு அங்கொன்றும் இங்குமாக நிற்பார்கள். சும்மா வேடிக்கை பார்ப்பார்கள். அதுவே முதல்வர் என்றால் ஆள் இல்லாத இடத்தில் எல்லாம் பாதுகாப்பு கொடுக்கிறார்கள். ஆயிரக்கணக்கான பேர் பாதுகாப்பில் ஈடுபடுகின்றனர். எதிர்க்கட்சி நடத்தும் கூட்டத்துக்கும் முழுமையான பாதுகாப்புக் கொடுப்பது அரசின் கடமை.
தமிழர், தமிழர் என்று சொல்லிக்கொண்டிருக்கும் முதல்வர் அவர்களே, தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் தான் 41 பேர் இறந்திருக்கிறார்கள். வாயளவில் சொன்னால் போதாது. காரியத்தில் செயலில் காட்ட வேண்டும். இவ்வளவு பேர் பலியானதற்கு காரணம். பாதுகாப்புக் கொடுக்காததுதான். நடப்பதை எல்லாம் மக்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். இதையெல்லாம் முதல்வர் கவனிக்கவில்லை என்றால், அடுத்தாண்டு தேர்தலில் டெபாசிட் கூட உங்கள் கட்சி வாங்க முடியாது.
காஞ்சிபுரத்தில் இருமல் மருந்து தயாரிக்கும் கம்பெனியின் மருந்தை சாப்பிட்டு 20 குழந்தைகள் பலியாகிவிட்டது. ஆனால் திமுக அரசின் சுகாதாரத்துறைக்கு இப்படி ஒரு மருந்து தயாரிக்கும் கம்பனி இருப்பதே தெரியவில்லை. அப்படி என்றால் மக்கள் மீது அரசுக்கு எத்தனை அக்கறை என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். தமிழகம் அரசின் சுகாதாரத்துறையின் அலட்சியத்தால் ஏற்பட்ட கொடுமையான நிகழ்வு என்று மத்தியப்பிரதேச அமைச்சர் குற்றம் சாட்டுகிறார். அங்குள்ள காவல்துறை இங்கு வந்து மருந்து நிறுவன உரிமையாளரை கைதுசெய்து சென்ற பின்னர்தான் இந்த அரசுக்கு தெரியவருகிறது. இப்படிப்பட்ட அவல ஆட்சி தொடர வேண்டுமா?
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் எல்லாம் தெருக்களின் பெயர்களையெல்லாம் மாற்ற வேண்டும் என்ற அறிவிப்பு வந்திருக்கிறது. ஏற்கெனவே போக்குவரத்துக் கழக பெயர் எல்லாம் எடுக்கப்பட்டது. மாவட்டத்துக்கு சூட்டப்பட்ட பெயர் எல்லாம் நீக்கப்பட்டது, மீண்டும் பிரச்னையை உருவாக்குகிறார். ஜாதி, மதம் பெயரில் தெருக்களின் பெயர் இருக்கக் கூடாது என்கிறார். நல்லதுதான், ஆனால் யார் பெயரை வைக்கிறீர்கள்..? உங்க அப்பா பெயரை வைக்க முயற்சி செய்கிறீர்கள். இதுதான் தவறு. எந்தத் தலைவர் பெயரையும் வைக்க வேண்டாம். ஒரு தலைவர் பெயரை வைத்தால் இன்னொருத்தருக்குப் பிடிக்காது. உங்க அப்பா பெயரை வைக்கத்தான் இந்த அரசாணை வெளியிட்டீர்கள், மீண்டும் அதிமுக அரசு அமைந்ததும் இது ரத்து செய்யப்படும். இவ்வாறு இபிஎஸ் பேசினார்.