சிறுகதை வாசிப்பு குறைந்து விட்டதாக சொல்வது தவறு: 'கலைமகள்' ஆசிரியர் சங்கரசுப்பிரமணியன் பேச்சு
சிறுகதை வாசிப்பு குறைந்து விட்டதாக சொல்வது தவறு: 'கலைமகள்' ஆசிரியர் சங்கரசுப்பிரமணியன் பேச்சு
ADDED : மே 26, 2025 12:50 AM

சென்னை: ''சிறுகதை வாசிப்பு என்பது குறைந்து விட்டதாக சிலர் கூறுகின்றனர்; அது குறையவில்லை. நல்ல கதையை கொடுத்தால், அதை படிக்க வாசகர்கள் தயாராக உள்ளனர்,'' என, 'கலைமகள்' மாத இதழின் ஆசிரியர் சங்கரசுப்பிரமணியன் பேசினார்.
கி.வா.ஜ., குடும்பத்தினர் மற்றும், 'கலைமகள்' இலக்கிய மாத இதழ் இணைந்து நடத்திய, சிறுகதைப் போட்டியில் வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா, சென்னையில் நேற்று நடந்தது.
இதில், பிரபல எழுத்தாளர் ராஜேஷ்குமார் சார்பில், அவரது மகன் ராம்குமார், எஸ்.ஆர்.எம்., பல்கலை தமிழ்ப் பேராயத்தின் தலைவர் கரு.நாகராஜன், 'தினமலர்' நாளிதழின் 'பட்டம்' இணைப்பு இதழ் ஆசிரியர் வெங்கடேஷ் ஆகியோருக்கு விருதுகளை, தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் அவ்வை அருள் வழங்கினார்.
நல்ல சிறுகதைகள்
விழாவில், 'கலைமகள்' ஆசிரியர் கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன் பேசியதாவது:
கி.வா.ஜ., மறைவுக்குப் பின், 1990ல் இருந்து அவரது பெயரிலான சிறுகதைப் போட்டியை, நாங்கள் தொடர்ந்து நடத்தி வருகிறோம்.
இது, 35 ஆண்டுகளாக வெற்றிகரமாக தொடர்கிறது. நடப்பாண்டு வெற்றி பெற்றவர்களுக்கு விருது வழங்கப்பட்டது. தமிழில் நல்ல சிறுகதைகளும், சிறுகதை எழுத்தாளர்களும் உருவாக வேண்டும் என்பது, இப்போட்டியின் நோக்கம்.
சிறந்த எழுத்தாளர்களை வெளி உலகிற்கு அடையாளப்படுத்துவது தான், இப்போட்டியின் சிறப்பு. பல எழுத்தாளர்கள் இப்போட்டியில் பரிசு வென்ற பின்னரே, வெளி உலகிற்கு பிரபலமாகி உள்ளனர்.
சிறுகதை வாசிப்பு என்பது குறைந்து விட்டது என, சிலர் கூறுகின்றனர். ஆனால், சிறுகதை வாசிப்பு குறையவில்லை. இன்றும் சிறுகதைகள் படிக்க, பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர். நல்ல கதையை நாம் கொடுத்தால், அதை படிக்க வாசகர்கள் தயாராக உள்ளனர்.
பத்திரிகையில் சிறுகதை என்பது முக்கியமானது. சிறுகதை எழுதுவது குறித்து பயிற்சி பட்டறை நடத்தி வருகிறோம். சிறுகதை மனித வாழ்வை மாற்றும் பெரிய துாண்டுகோலாக உள்ளது. சிறுகதையில் வரும் கதாபாத்திரங்கள் மனித இயல்பை மாற்றி அமைக்க உதவுகின்றன. இவை காலத்தின் பிரதிபலிப்பை காட்டுகின்றன.
இவ்வாறு அவர் பேசினார்.
பாடம் எடுக்க வேண்டும்
விழாவில், 'புராண கதைகள் சொல்லும் வாழ்க்கை தத்துவங்கள்' என்ற தலைப்பில், மருத்துவர் பிரியா ராமசந்திரன் பேசியதாவது:
இன்று நாம் ராமாயணம், மகாபாரதம் உள்ளிட்ட புராண கதைகளை வாசிப்பதை புறக்கணித்து விட்டோம். அதை இயற்றியவர்கள், மானுடம் உய்ய வேண்டும் என்ற, நோக்கில் அவற்றை எழுதினர்.
பெண்களை இழிவுபடுத்தினால், அந்த சமுதாயம் அழிந்து விடும் என்பது, இவை சொல்லும் நீதி. இன்று நம் சமூகத்தின் நிலை அவ்வாறு தான் உள்ளது.
பெண்ணியம், பெண் விடுதலை பற்றி பாரதியார் பேசினார். அதனால், பெண் கல்வி தற்போது கட்டாயமாகி விட்டது. தற்போது, ஆண்களுக்கு சிறப்பு கல்வி கற்பிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு, பெண்களின் மேன்மை மற்றும் தாய்மையின் புனிதம் குறித்து, பாடம் எடுக்க வேண்டும். ராமாயணம், மகாபாரதம் உள்ளிட்ட கதைகளை, சொல்லிக் கொடுப்பது அவசியம்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், கி.வா.ஜ., மகன் குமார், மகள் உமா பாலசுப்பிரமணியன், சாஸ்தா பல்கலை முன்னாள் தலைவர் ரகுநாதன், 'கலைமகள்' பதிப்பாளர் ராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.