சட்டசபை இடைத்தேர்தல் முடிந்தது! ஓட்டுப்பதிவு குறைந்தது ஏன்?
சட்டசபை இடைத்தேர்தல் முடிந்தது! ஓட்டுப்பதிவு குறைந்தது ஏன்?
UPDATED : அக் 07, 2026 12:35 AM
ADDED : அக் 06, 2026 09:36 PM

சென்னை: பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே, தமிழகம், மேற்கு வங்கம், புதுச்சேரியில் காலியாக இருந்த ஐந்து சட்டசபை தொகுதிகள் மற்றும் அசாம் மாநிலத்தில் ஒரு லோக்சபா தொகுதிக்கான இடைத்தேர்தல் நேற்று நடந்து முடிந்தது. இவற்றுக்கான ஓட்டுப்பதிவில், கடந்த பொதுத்தேர்தலை விட குறைவான ஓட்டுக்களே பதிவாகியுள்ளன.
தமிழகத்தில், மதுராந்தகம், தாராபுரம், திருச்சி கிழக்கு, பெருந்துறை, அம்பாசமுத்திரம், கரூர், விராலிமலை ஆகிய, ஏழு சட்டசபை தொகுதிகள் காலியாக உள்ளன. இதில், மதுராந்தகம், தாராபுரம் சட்டசபை தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவிப்பை, செப்., 8ம் தேதி தேர்தல் கமிஷன் வெளியிட்டது. அத்துடன், புதுச்சேரி மாநிலத்தில் தட்டாஞ்சாவடி, மேற்கு வங்க மாநிலம் நந்திகிராம், ரெஜிநகர் ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கும், அசாம் மாநிலம் நாகோன் லோக்சபா தொகுதிக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், ஐந்து முனை போட்டி நிலவியது. ஆளும் கட்சியான த.வெ.க., முக்கிய எதிர்க்கட்சிகளான தி.மு.க., - அ.தி.மு.க., மட்டுமின்றி, நாம் தமிழர் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் வேட்பாளர்களை களமிறக்கின. த.வெ.க., சார்பில் மதுராந்தகத்தில், முன்னாள் எம்.எல்.ஏ., மரகதம் குமரவேல், தாராபுரத்தில் முன்னாள் எம்.எல்.ஏ., சத்யபாமா ஆகியோர் நிறுத்தப்பட்டனர். இவர்களுக்கு, தொகுதியில் சில இடங்களில் எதிர்ப்பு கிளம்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
த.வெ.க., வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் விஜய், தலா இரண்டு நாள் பிரசாரம், இரண்டு நாள் 'ரோடு ஷோ' நடத்தினார். அமைச்சர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். தி.மு.க., தலைவர் ஸ்டாலின், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளும், தங்கள் கட்சிகளின் வேட்பாளர்கள், கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், மதுராந்தகம், தாராபுரம் உள்பட மூன்று மாநிலங்களின் ஐந்து சட்டசபை தொகுதிகள் மற்றும் அசாம் மாநில லோக்சபா தொகுதிக்கான இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவு, நேற்று காலை 7:00 மணிக்கு தொடங்கியது; மாலை, 6:00 மணிக்கு முடிவடைந்தது.
காலை முதல் வாக்காளர்கள் வரிசையில் காத்திருந்து, ஆர்வமுடன் ஓட்டளித்தனர். மதுராந்தகம் தொகுதியில், 85.99 சதவீதமும், தாராபுரம் தொகுதியில் 80.31 சதவீதம் ஓட்டுகளும் பதிவாகியுள்ளன. புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில், 80.8 சதவீதம் ஓட்டுகள் பதிவாகியுள்ளன.
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள நந்திகிராம் தொகுதியில், 80.67, ரெஜிநகர் தொகுதியில் 79.85 சதவீதம் ஓட்டுகள் பதிவாகி உள்ளன. அசாம் மாநிலம், நாகோன் லோக்சபா தொகுதியில், 76.17 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளன.
முந்தைய சட்டசபை பொதுத்தேர்தலை காட்டிலும், இடைத்தேர்தலில் குறைந்த ஓட்டுகளே பதிவாகியுள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் நடந்த தேர்தலில், மதுராந்தகத்தில், 93.3 சதவீதமும், தாராபுரத்தில், 89.9 சதவீதம் ஓட்டுகளும் பதிவாகி இருந்தன.
மேற்கு வங்கம் நந்திகிராமில் 94.7 சதவீதம், ரெஜிநகரில், 93.1 சதவீதம், புதுச்சேரி தட்டாஞ்சாவடியில், 88.6 சதவீதம் ஓட்டுகள் பதிவாகியிருந்தன. ஓட்டுப் பதிவு சதவீதம் குறைந்து உள்ளதால், களத்தில் உள்ள கட்சிகளும், வேட்பாளர்களும் கலக்கம் அடைந்துள்ளனர்.
மூன்று மாநில சட்டசபை இடைத்தேர்தல், அசாம் லோக்சபா இடைத்தேர்தல் முடிந்த நிலையில், ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், ஓட்டு எண்ணிக்கை மையங்களுக்கு பாதுகாப்பாக எடுத்துச் செல்லப்பட்டன. ஓட்டு எண்ணிக்கை, வரும், 9ம் தேதி நடக்கிறது.
சட்டசபை பொது தேர்தல் நிலவரம்
* மதுராந்தகம்
மொத்த ஓட்டுகள் - 2.12 லட்சம்
பதிவான ஓட்டுகள் - 1.97 லட்சம்
ஓட்டுப்பதிவு சதவீதம் - 93.3
* தாராபுரம்
மொத்த ஓட்டுகள் - 2.22 லட்சம்
பதிவான ஓட்டுகள் - 1.98 லட்சம்
ஓட்டுப்பதிவு சதவீதம் - 89.9
மேற்கு வங்கம்
* நந்திகிராம்
மொத்த ஓட்டுகள் - 2.67 லட்சம்
பதிவான ஓட்டுகள் - 2.51 லட்சம்
ஓட்டு சதவீதம் - 94.7
* ரெஜிநகர்
மொத்த ஓட்டுகள் - 2.57 லட்சம்
பதிவான ஓட்டுகள் - 2.37 லட்சம்
ஓட்டு சதவீதம் - 93.1
புதுச்சேரி தட்டாஞ்சாவடி
மொத்த ஓட்டுகள் - 26,616
பதிவான ஓட்டுகள் - 23,382
ஓட்டு சதவீதம் - 88.6 சதவீதம்
* அசாம் நாகோன் லோக்சபா தொகுதி
* மொத்த ஓட்டுகள் - 18.2 லட்சம்
பதிவான ஓட்டுகள் - 15.44 லட்சம்
ஓட்டுப்பதிவு சதவீதம் - 85.1

