இன்று மழை தீபாவளி... 19 மாவட்டங்களுக்கு கனமழை 'வார்னிங்'
இன்று மழை தீபாவளி... 19 மாவட்டங்களுக்கு கனமழை 'வார்னிங்'
UPDATED : அக் 31, 2024 01:39 PM
ADDED : அக் 31, 2024 01:14 PM

சென்னை: தமிழகத்தில் உள்ள 19 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த அக்.,1ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை பெய்யத் தொடங்கியுள்ளது. பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக, சென்னை, திருவள்ளூர், கோவை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் அதி கனமழை பெய்தது.
இதனிடையே, மன்னார் வளைகுடா பகுதிகளில், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காணப்படுகிறது. இந்த இரண்டு அமைப்புகளில் ஏற்படும் தாக்கம் காரணமாக, வடகிழக்கு பருவ மழை மீண்டும் தீவிரமடைய வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
அதன்படி, நேற்று முதல் மீண்டும் கனமழை துவங்கியுள்ளது. நேற்றும் சென்னையில் கனமழை கொட்டிய நிலையில், தீபாவளியான இன்றும் 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று
திண்டுக்கல், மதுரை, திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, தருமபுரி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்புள்ளது.
நாளை
நீலகிரி, கோவை, ஈரோடு, கரூர், திருச்சி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, சிவகங்கை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய 15 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளது.
நவ., 2ம் தேதி
நவம்பர் 2ம் தேதி 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தேனி, தென்காசி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களிலும், ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்யும்.
சென்னையைப் பொறுத்தவரையில் அடுத்த 24 மணிநேரத்தில் இன்று மிதமானது முதல் கனமழை பெய்யக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கூடுதல்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட கூடுதலாக 25 சதவீதம் பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்டோபர் 1 முதல் தற்போது வரை 171.5 மி.மீ., மழை பெய்ய வேண்டிய நிலையில், 214.2 மி.மீ., வரை மழை பெய்துள்ளது.
அதிகபட்சம்
மாவட்டங்களைப் பொறுத்தவரையில் அதிகபட்சமாக, திருப்பத்துாரில் 118 சதவீதம் கூடுதல் மழை பெய்துள்ளது. தொடர்ந்து, கோவையில் 105 சதவீதமும், மதுரையில் 84 சதவீதமும், சிவகங்கையில் 72 சதவீதமும், திருப்பூரில் 90 சதவீதமும் இயல்பை விட கூடுதலாக மழைப் பொழிவு இருந்துள்ளது.