ADDED : ஜன 20, 2024 12:32 AM

கோத்தகிரி:ஏழு ஆண்டுகளுக்கு பின், நேற்று முன்தினம், நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கோடநாடு எஸ்டேட்டிற்கு சசிகலா வந்தார். கோடநாடு எஸ்டேட்டில் ஜெயலலிதாவின் சிலை அமைக்க தீர்மானிக்கப்பட்டு இருக்கும் இடத்துக்கு நேற்று காலை சென்ற சசிகலா, அங்கு நடந்த பூமி பூஜையில் கலந்து கொண்டார்.
பின், அவர் அளித்த பேட்டி:
ஜெயலலிதா இல்லாமல் நான் கோடநாடு எஸ்டேட்டுக்கு வந்ததில்லை. தனியாக எஸ்டேட்டுக்கு வர யோசித்தபோது, சிலர் அதற்கு சிக்கல் ஏற்படுத்தினர்.
தனியாக செல்ல வேண்டாம் என அச்சுறுத்தினர். அதனால், இங்கு வருவதில் தயக்கம் இருந்தது.
ஜெயலலிதாவுக்கு கோடநாடு எஸ்டேட் என்றால் உயிர். அவருக்கு மிகவும் பிடித்தமான இடம். அவர் இங்கு வந்து தங்கும்போது முதல்வராக இருந்தாலும், அதை இங்கிருப்போரிடம் ஒரு நாளும் காட்டிக் கொண்டதில்லை.
படாடோபம் எதுவும் இல்லாமல் சாதாரணமாகவே இருப்பார். வெளிநாட்டை விட, கோடநாட்டுக்கு செல்வதே மகிழ்ச்சியளிக்கிறது என்பார்.
பெங்களூரில் இருந்து தமிழகம் திரும்பிய போது, ஜெயலலிதாவுக்கு கோடநாடு எஸ்டேட்டில் நினைவிடம் அமைக்க வேண்டும் என தீர்மானித்தேன்.
அவர் இறந்து விட்ட நிலையில், நானும் வராமல் இருந்து விட்டோ னோ என இங்கிருக்கும் தொழிலாளர்கள் நினைத்திருக்கக் கூடும். ஆனால், அப்படியில்லை என்பதால், இப்போது இங்கு வந்திருக்கிறேன். ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்க சாஸ்திரப்படி, வாஸ்துபடி இடம் தேர்வு செய்யப்பட்டது. தற்போது அந்த இடத்தில் பூமி பூஜை செய்யப்பட்டுள்ளது.
கோடநாடு சுற்றுலா இடமாக உள்ளது. அதனால், சுற்றுலா பயணியரும் ஜெயலலிதா நினைவிடத்துக்கு வந்து செல்வதற்கு ஏதுவாக, எஸ்டேட்டின் சாலையோர இடத்தில் நினைவிடம் அமைக்க திட்டமிடப்பட்டது. நினைவிடம் அமைக்கப்பட்டு, வரும் ஆகஸ்டில் திறக்கப்படும். அங்கு ஜெயலலிதாவுக்கு சிலையும் வைக்கப்படும்.
இவ்வாறு சசிகலா கூறினார்.