ADDED : மார் 02, 2024 04:02 PM

சென்னை: போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக, தி.மு.க., முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக்கின் 8 வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளது.
டில்லியில் தங்கி, உணவு பொருட்கள் போல, வெளிநாடுகளுக்கு ' மெத்தாம்பெட்டமைன்' எனப்படும் போதைப் பொருள் தயாரிக்க பயன்படுத்தும் ' சூடோபெட்ரின்' வேதிப்பொருளை கடத்திய வழக்கில் சென்னையைச் சேர்ந்த முகேஷ், முஜிபுர் ரஹ்மான், விழுப்புரத்தைச் சேர்ந்த அசோக் குமார் ஆகியோர் பிப்.,15 ல் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் 75 கோடி ரூபாய் சூடோபெட்ரின் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
தொடர் விசாரணையில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவராக சென்னை சாந்தோம், அருளானந்தம் தெருவில் வசித்து வரும் ஜாபர் சாதிக்(36) இருப்பது தெரியவந்தது. இவர், தி.மு.க.,வில், சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளராக இருந்தார். சினிமா படங்கள் தயாரிப்பாளராகவும், ஹோட்டல் அதிபராகவும் வலம் வந்தார்.
டில்லியில் உள்ள மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சென்னையில் உள்ள ஜாபர் சாதிக் வீட்டில் சம்மன் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. ஆனால் ஜாபர் சாதிக் சகோதரர்கள் மற்றும் குடும்பத்தாருடன் தலைமறைவாக உள்ளார். அவர் வெளிநாட்டிற்கு தப்பி செல்லாமல் இருக்க லுக் அவுட் நோட்டீஸை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கொடுத்து உள்ளனர்.
இந்நிலையில், சென்னையில் உள்ள ஜாபர் சாதிக் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் நிலம் வங்கிக்கணக்குகள் தொடர்பான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து, அவரது எட்டு வங்கிக்கணக்குகளை போதைப்பொருள்தடுப்பு பிரிவு போலீசார் முடக்கி உள்ளனர்.

