போதை பொருள் கடத்தல்: சென்னை கொண்டு வரப்பட்டார் ஜாபர்சாதிக்
போதை பொருள் கடத்தல்: சென்னை கொண்டு வரப்பட்டார் ஜாபர்சாதிக்
UPDATED : மார் 18, 2024 06:05 PM
ADDED : மார் 18, 2024 04:13 AM

சென்னை: சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பல் தலைவன் ஜாபர் சாதிக் டில்லியில் இருந்து இன்று (மார்ச் 18) சென்னைக்கு அழைத்து வரப்பட்டார். இவரை இன்று முக்கிய இடங்களுக்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்துகின்றனர்.
சென்னையை சேர்ந்த, தி.மு.க., அயலக பிரிவு முன்னாள் நிர்வாகியும், சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பல் தலைவனுமான, ஜாபர் சாதிக், 35, டில்லியில் மார்ச் 9ல் கைது செய்யப்பட்டார்.
அவரை பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஏழு நாள் தங்கள் காவலில் எடுத்து விசாரித்தனர்.
ஜாபர்சாதிக் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்துள்ளார். போதை பொருள் கடத்தல் தொழிலுக்கு பின்னணியில் இருப்பவர்கள் யார் யார், தன்னுடன் தொடர்பில் இருந்த வி.ஐ.பி.,க்கள், அவர்களுக்கு தரப்பட்ட பணம் என, அனைத்து விபரங்களையும் வாக்குமூலமாக தெரிவித்துள்ளார்.
அவரை நேற்று முன்தினம், பாட்டியாலா நீதிமன்றத்தில் மத்திய போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஆஜர்படுத்தினர். அப்போது, விசாரணையின் போது அதிகாரிகள் தன்னை துன்புறுத்தவில்லை என்றும் நீதிபதியிடம் தெரிவித்துள்ளார். அவருக்கு மேலும் மூன்று நாட்கள் காவல் விசாரணை நீடிக்கப்பட்டுள்ளது.
ஜாபர் சாதிக்கிடம் இருந்து ஏழு மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. அதிலுள்ள, தகவல்களை ஆய்வு செய்யும் பணியும் நடக்கிறது. சைபர் கிரைம் தடயவியல் நிபுணர்களின் உதவியும் நாடப்பட்டுள்ளது.
விசாரணைக்கு பின், ஜாபர் சாதிக் திஹார் சிறையில் அடைக்கப்பட உள்ளார் என, மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

