போதைப் பொருள் கடத்தல் விவகாரம் ஜாபர் சாதிக் வீடு, அலுவலகத்திற்கு 'சீல்'
போதைப் பொருள் கடத்தல் விவகாரம் ஜாபர் சாதிக் வீடு, அலுவலகத்திற்கு 'சீல்'
ADDED : பிப் 29, 2024 11:45 PM

சென்னை:போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக, தி.மு.க., முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் வீடு மற்றும் அலுவலகத்தில், டில்லி போலீசார், நேற்று எட்டு மணி நேரம் சோதனை நடத்தி, 'சீல்' வைத்தனர்.
டில்லியில் தங்கி, உணவு பொருட்கள் போல, அமெரிக்கா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு, 'மெத்தாம்பெட்டமைன்' எனப்படும் போதைப் பொருள் தயாரிக்க பயன்படுத்தும் 'சூடோபெட்ரின்' வேதிப்பொருளை கடத்திய வழக்கில், சென்னையைச் சேர்ந்த முகேஷ், 33, முஜிபுர் ரஹ்மான், 34, விழுப்புரத்தைச் சேர்ந்த அசோக்குமார், 34, ஆகியோர், பிப்., 15ல் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடம், 75 கோடி ரூபாய் சூடோபெட்ரின் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
அமீரின் உறவினர்
தொடர் விசாரணையில், போதைப் பொருள் கடத்தல் கும்பல் தலைவராக, சென்னை சாந்தோம், அருளானந்தம் தெருவில் வசித்து வரும் ஜாபர் சாதிக், 36, இருப்பது தெரியவந்தது. இவர், தி.மு.க.,வில், சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளராக இருந்தார்.
சினிமா படங்கள் தயாரிப்பாளராகவும், ஹோட்டல் அதிபராகவும் வலம் வந்தார். பருத்தி வீரன் உள்ளிட்ட படங்களை இயக்கிய அமீரின் நெருங்கிய உறவினர் என, கூறப்படுகிறது.
இருவரும், தொழில் பங்குதாரர்களாகவும் உள்ளனர். கிழக்கு கடற்கரை சாலையில் ஹோட்டல் ஒன்றை துவங்கி உள்ளனர். அதற்கான நிகழ்ச்சியில், நடிகர் விஜய் சேதுபதி உள்ளிட்டோர் பங்கேற்று உள்ளனர்.
புதுக்கோட்டையைச் சேர்ந்த, தி.மு.க., முக்கியப் புள்ளி வாயிலாக, ஜாபர் சாதிக், அக்கட்சி தலைமைக்கு நெருக்கமான நபராக மாறினார். வெளிநாடு வாழ் இந்தியர்களுடன் ஏற்பட்ட தொடர்பை பயன்படுத்தி, போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதையடுத்து, பிப்., 26ல், டில்லியில் உள்ள, மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என, சென்னையில் உள்ள, ஜாபர் சாதிக் வீட்டில், 'சம்மன்' நோட்டீஸ் ஒட்டப்பட்டது.
ஆனால், ஜாபர் சாதிக், தன் சகோதரர்கள் மற்றும் குடும்பத்தாருடன் தலைமறைவாக உள்ளார். இதனால், ஜாபர் சாதிக் சொந்த ஊரான, ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில், டில்லி போலீசார் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாக்குதல்
அத்துடன், சென்னை சாந்தோம், அருளானந்தம் தெருவில் உள்ள, ஜாபர் சாதிக் வீடு மற்றும் புரசைவாக்கம் டவுட்டன் பகுதியில் ஜாபர் சாதிக் நடத்தி வரும் தனியார் தங்கும் விடுதி மற்றும் அலுவலகத்தில், நேற்று காலை முதல், எட்டு மணி நேரம் சோதனை நடத்தினர்; கடத்தல் தொடர்பாக முக்கிய ஆவணங்களை கைப்பற்றி உள்ளனர்.
பின்னர், ஜாபர் சாதிக் வீடு மற்றும் அலுவலகத்திற்கு, 'சீல்' வைத்துஉள்ளனர்.
இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கம், காம்டா நகரில் உள்ள, ஜாபர் சாதிக் நட்பு வட்டத்தில் உள்ள, தி.மு.க., மாவட்ட செயலரின் அலுவலகத்தில் சோதனை நடப்பதாக தகவல் வெளியானது.
இதையடுத்து, அங்கு சென்ற தனியார் 'டிவி' சேனல் ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து, நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடக்கிறது.

