ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினர் மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதம்; 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி நடந்தது
ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினர் மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதம்; 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி நடந்தது
ADDED : மார் 24, 2025 05:27 AM

சென்னை : அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான, 'ஜாக்டோ - ஜியோ' சார்பில், 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் உண்ணாவிரத போராட்டம் நேற்று நடந்தது.
சென்னையில், எழிலகம் வளாகத்தில் நடந்த போராட்டத்திற்கு, ஜாக்டோ - ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் தலைமை வகித்தார்.
போராட்டத்தில் பங்கேற்றவர்கள், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உட்பட, 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
போராட்டம் குறித்து சுரேஷ் கூறியதாவது:
தமிழக அரசு தாக்கல் செய்த 2025 - 26ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்ட கால கோரிக்கைகளான, பழைய ஓய்வூதிய திட்டம், சரண் விடுப்பு உள்ளிட்டவை நிறைவேற்றப்படும் என்று, எதிர்பார்த்தோம். ஆனால், பட்ஜெட்டில் எங்களுக்கு கிடைத்தது ஏமாற்றமே.
ஓய்வூதியம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட குழு, ஒன்பது மாதங்களுக்கு பிறகு அறிக்கை சமர்ப்பிக்கும்.
அதன்பின், அதன் மீது ஆய்வு நடத்தப்படும் என்பது, இந்த ஆட்சியில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கையை, தி.மு.க., நிறைவேற்ற போவதில்லை என்பதை உறுதிப்படுத்தி உள்ளது.
அதேபோல, சரண் விடுப்பு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் விடுவிக்கப்படும் என்ற அறிவிப்பும், எங்களை ஏமாற்றும் செயலாகவே பார்க்கப்படுகிறது.
எனவே, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சற்றும் பயனற்ற பட்ஜெட்டை கண்டித்தும், தமிழக அரசை எச்சரித்தும், 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும், அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டோம்.
தற்போது, தமிழகத்தில் அனைத்து அரசு துறைகளிலும், 4.50 லட்சத்திற்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. அவற்றை, முறையாக நிர்ணயிக்கப்பட்ட அரசு ஊதியத்தில் நிரப்ப வேண்டும்.
தற்போது தொகுப்பூதியத்தில் ஊழியர்களை நியமிப்பதும், தனியார் நிறுவனங்கள் வழியாக நியமிப்பதும் அதிகரித்து வருகிறது. அரசு அதை கைவிட்டு, வேலை மற்றும் தகுதிக்கு ஏற்ப, நிர்ணயிக்கப்பட்ட ஊதியத்தை அனைத்து ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும்.
உண்ணாவிரத போராட்டத்திற்கு பின், அரசுக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்படும். இதுவே, தமிழக அரசுக்கு கடைசி வாய்ப்பு. அதாவது, ஒரு மாதம் அரசுக்கு அவகாசம் வழங்குகிறோம்.
இதை முறையாக பயன்படுத்தி, எங்கள் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில், அடுத்த மாதம் இறுதியில் மாநில அளவில் மிகப்பெரிய போராட்டத்தை துவக்குவோம். இவ்வாறு அவர் கூறினார்.