பாலிடெக்னிக் மாணவர்களுக்கு ஜாக்பாட் ஓராண்டு இலவச 'ஏ.ஐ., டூல்' வசதி
பாலிடெக்னிக் மாணவர்களுக்கு ஜாக்பாட் ஓராண்டு இலவச 'ஏ.ஐ., டூல்' வசதி
ADDED : ஆக 13, 2025 03:57 AM
பாலிடெக்னிக் மாணவர்களின் தொழில் கல்வி திறனை மேம்படுத்த, 'ஏ.ஐ., டூல்' வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே, டிப்ௌாமா படிப்பு மீதான ஆர்வம், மாணவர்கள் மத்தியில் குறைந்து வருகிறது.
மாணவர் சேர்க்கை குறைவதை தடுக்க, டிப்ௌாமா படிப்பில் புதிய திட்டங்களை, தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிமுகம் செய்து வருகிறது.
தற்போது, ஏ.ஐ., எனும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி, உலகம் முழுதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. கற்றல், கற்பித்தல் செயல்பாடுகளிலும், ஏ.ஐ., பங்களிப்பு வளர்ச்சி கண்டுள்ளது.
இந்நிலையில், ஏ.ஐ., தொழில்நுட்ப வசதிகளை, டிப்ௌாமா படிப்பில் அறிமுகம் செய்ய, தொழில்நுட்ப கல்வி இயக்ககம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, தொழில்நுட்ப கல்வி இயக்கக அதிகாரிகள் கூறியதாவது:
அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பாலிடெக்னிக் கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்கள், ஏ.ஐ., தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, தொழிற்கல்வி குறித்து அறிந்து கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இதற்காக, தமிழக அரசின் வழிகாட்டி நிறுவனம் சார்பில், 'கூகுள்' நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மாதம் 1,950 ரூபாய் மதிப்பிலான, 'ஜெமினி' ஏ.ஐ., சேவையை, பாலிடெக்னிக் மாணவர்கள் ஓராண்டுக்கு இலவசமாக பயன்படுத்தலாம்.
மாணவர்கள் அனைவரும், அடுத்த மாதம், 15ம் தேதிக்குள், இலவச 'ஜெமினி ஏ.ஐ., டூல்' சேவையை பெற, பதிவு செய்ய வேண்டும் என, கல்லுாரி முதல்வர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -