ADDED : ஜன 27, 2025 03:43 AM

சென்னை: கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடிய, ஜெகபர் அலி கொலையை தடுக்க தவறிய, திருமயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே, வெங்களூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகபர் அலி, 58; சமூக ஆர்வலர்.
புகார்
அவர், மூன்று ஆண்டு களாக, திருமயம் மற்றும் அதன் சுற்றுப் பகுதியில் உள்ள கல் குவாரிகளில், கனிமவள கொள்ளை நடப்பதை தடுப்பதற்காக, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
கலெக்டர், தாசில்தார் உள்ளிட்ட அரசு அதிகாரிகளிடம், புகார் கொடுத்து வந்தார்.
கடந்த 17ம் தேதி தன் வீட்டருகே உள்ள, பள்ளிவாசலில் தொழுகை முடிந்து, இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பினார். அப்போது லாரி ஏற்றி கொல்லப்பட்டார். இது குறித்து, சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கைது
முன்னதாக, ஜெகபர் அலி கொலையை திருமயம் போலீசார் விசாரித்து வந்த போது, கல் குவாரி உரிமையாளர் ராசு மகன் தினேஷ்குமார், லாரி உரிமையாளர் முருகானந்தம், லாரியை மோதி, ஜெகபர் அலியை கொலை செய்ய, ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து, திருமயத்திற்கு அழைத்து வரப்பட்ட, ஓட்டுநர் காசிநாதன் ஆகியோரை கைது செய்தனர்.
கனிமவள கொள்ளை குறித்து, ஜெகபர் அலி பல முறை புகார் அளித்தும், அதன் மீது, திருமயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், அவருக்கு போதிய பாதுகாப்பு அளிக்காமல் அலட்சியமாக இருந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
அதைத் தொடர்ந்து, ஜெகபர் அலி கொலையை தடுக்க தவறிய, குணசேகரன் நேற்று 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
இதற்கான உத்தரவை, திருச்சி சரக டி.ஐ.ஜி., வருண்குமார் பிறப்பித்துஉள்ளார்.

