வெல்லம், நாட்டு சர்க்கரை உற்பத்தி பாதிப்பு; கரும்பு சாகுபடி பரப்பு குறைவால் சிக்கல்
வெல்லம், நாட்டு சர்க்கரை உற்பத்தி பாதிப்பு; கரும்பு சாகுபடி பரப்பு குறைவால் சிக்கல்
UPDATED : ஏப் 05, 2025 05:15 AM
ADDED : ஏப் 04, 2025 11:23 PM

உடுமலை; உடுமலை பகுதிகளில், கரும்பு சாகுபடி பரப்பு பெருமளவு குறைந்துள்ளதால், வெல்லம், நாட்டு சர்க்கரை உற்பத்தி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இயற்கை முறையில் இனிப்பு உற்பத்தி தொழிலை காக்க, அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருப்பூர் மாவட்டம், உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளில், அமராவதி அணை பாசனம் மற்றும் திருமூர்த்தி அணை ஏழு குளம் பாசன பகுதிகளில், கரும்பு சாகுபடி பிரதானமாக உள்ளது.
இப்பகுதிகளில், 30 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில், சாகுபடி செய்யப்பட்டு வந்த நிலையில், அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை, இரு ஆண்டுகளாக மூடப்பட்டுள்ளதால், இதன் சாகுபடி பெருமளவு குறைந்துள்ளது.தற்போது, இப்பகுதிகளில், 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மட்டுமே, சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
இப்பகுதியில், 30க்கும் மேற்பட்ட கிரசர் ஆலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு, கரும்பு பிழிந்து எடுத்து, அதிலிருந்து கிடைக்கும் கரும்பு பாலை, பெரிய அளவிலான கொப்பரைகள் வாயிலாக காய்ச்சி, உருண்டை வெல்லம், அச்சு வெல்லம் மற்றும் நாட்டு சர்க்கரை எனப்படும் கரும்பு சர்க்கரை உற்பத்தி செய்து வருகின்றனர்.
உற்பத்தி செய்யப்படும் வெல்லம், சர்க்கரை பொள்ளாச்சி மார்க்கெட்டிற்கு கொண்டு சென்று, அங்கிருந்து, பல்வேறு மாவட்டங்களுக்கு கேரளா மாநில வியாபாரிகள் வந்து கொள்முதல் செய்கின்றனர்.
தற்போது, இப்பகுதிகளில் சாகுபடி பரப்பு பெருமளவு குறைந்ததால், வெல்லம் மற்றும் நாட்டு சர்க்கரைக்கு தேவையான கரும்பு கிடைக்காமல், உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக ஒவ்வொரு ஆலைகளிலும், தினமும், 5 டன் வெல்லம், நாட்டு சர்க்கரை உற்பத்தி செய்யப்படும் நிலையில், கரும்பு பற்றாக்குறையால், ஒரு டன், இரு டன் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது.
அரசு கவனம் செலுத்தணும்
கிரசர் ஆலை அமைத்துள்ள விவசாயிகள் கூறியதாவது:
இயற்கையான முறையில், ரசாயன கலப்பு இல்லாத, வெல்லம், நாட்டு சர்க்கரை குறித்து, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதால் தற்போது, ஆர்வம் அதிகரித்து வருகிறது.
ஒரு டன் கரும்பிலிருந்து, 120 கிலோ வெல்லம் உற்பத்தி செய்யலாம். ஒரு டன் கரும்பு, ரூ. 3,500, வெட்டுக்கூலி, காய்ச்சும் கூலி, போக்குவரத்து கட்டணம் என, ரூ. 6,200 வரை செலவாகிறது.
தற்போது, தமிழ்ப்புத்தாண்டு மற்றும் கேரளாவில் சித்திரை விஷூ கொண்டாட்டங்களுக்கு விற்பனை அதிகரித்து வருகிறது.
வெல்லம், 30 கிலோ சிப்பம், ரூ. 1,400 வரையும், கரும்பு சர்க்கரை, ரூ. 1,700க்கும் விற்று வருகிறது. தற்போது, ஆலைக்கு தேவையான கரும்பு கிடைக்காததால், உற்பத்தி பாதித்துள்ளது. இதனால், பற்றாக்குறை ஏற்பட்டு, விலை உயரும் வாய்ப்புள்ளது.
கரும்பு சாகுபடியில் நஷ்டம், வெல்லம், கரும்பு சர்க்கரை உற்பத்தி செலவினம் அதிகரிப்பு, தொழிலாளர்கள் பற்றாக்குறை மற்றும் உற்பத்தி செய்த சர்க்கரை, வெல்லத்திற்கு உரிய விலை கிடைக்காதது, உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால், இத்தொழிலை விட்டு பலர் வெளியேறி வருகின்றனர்.
எனவே, அரசு கவனம் செலுத்தி, கரும்பு சாகுபடி பரப்பை அதிகரிக்கவும், உரிய விலை கிடைக்கவும், இயற்கை உற்பத்தி பொருட்களுக்குரிய அங்கீகாரம் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, தெரிவித்தனர்.