ADDED : மே 10, 2025 06:47 PM

உடனடி பலனுக்கு...
பெருமாளின் அவதாரங்களில் உக்கிரமானது நரசிம்ம அவதாரம். தன் பக்தன் பிரகலாதனை காப்பாற்ற நொடிப்பொழுதில் துாணில் தோன்றியதால் நரசிம்மரை 'அவசரத் திருக்கோலம்' என்பர்.
ஏன் இந்த அவசரம்?
அசுரர் குலத்தில் பிறந்தாலும் பெருமாள் மீது பக்தி கொண்டவன் பிரகலாதன். ஆனால் அவனது தந்தையான இரணியன் ஆணவத்தால் 'நானே கடவுள்' என மகனை மிரட்டினான். ஆனால் பிரகலாதனோ, 'இந்த பிரபஞ்ச வடிவானவர் பெருமாள். அவர் துாணிலும் துரும்பிலும் நிறைந்திருக்கிறார்' என தந்தைக்கு விளக்கினான்.
கோபம் கொண்ட இரணியன் தன் அரண்மனைத் துாணைக் காட்டி, 'உன் ஹரி (பெருமாள்) இதில் இருக்கிறானா' எனக் கேட்டதற்கு, 'ஆம்' என்றான் பிரகலாதன். இரணியன் கதாயுதத்தால் துாணை உடைக்க முயன்றான். அதில் இருந்து சிங்க முகமும், மனித உடம்பும் கொண்டவராக கர்ஜனையுடன் தோன்றினார் நரசிம்மர். கூரிய நகங்களால் அசுரனின் வயிற்றைக் கிழித்து, குடலை மாலையாக அணிந்து கொண்டார். இப்படி தன் பக்தனின் வாக்கை உண்மையாக்க வந்த நரசிம்மரை வழிபட்டவருக்கு உடனடி பலன் கிடைக்கும். இதை 'நாளை என்பது நரசிம்மனுக்கு இல்லை' என்பார்கள்.
கடன் பிரச்னைக்கு...
நரசிம்மரை புகழ்ந்து பாடுவதற்காகவே அகோபில மடத்தின் 44வது பட்டம் அழகிய சிங்கரான முக்கூர் சுவாமிகள் ஸ்லோகம் ஒன்றை அருளியுள்ளார். அதன் தமிழாக்கம் இங்கு தரப்பட்டுள்ளது. பிரதோஷ நேரத்தில் (மாலை 4:30 - 6:00 மணி) 108 முறை சொன்னால் கடன் பிரச்னை, எதிரி தொல்லை, தொழில் போட்டி மறையும். தொடர்ந்து 48 நாள் படித்தால் மிகவும் நல்லது. அப்போது காய்ச்சிய பசும்பால் அல்லது பானகத்தை நைவேத்யம் செய்யுங்கள்.
நரசிம்மனே தாய்; நரசிம்மனே தந்தை சகோதரனும் நரசிம்மனே; நண்பனும் நரசிம்மனே
அறிவும் நரசிம்மனே; செல்வமும் நரசிம்மனேஎஜமானனும் நரசிம்மனே; எல்லாமும் நரசிம்மனேஇந்த லோகம் முழுவதிலும் நரசிம்மனே; பரலோகத்திலும் நரசிம்மனே
நீ எங்கெங்கு செல்கிறாயோ அங்கெல்லாம் நரசிம்மனேநரசிம்மனைக் காட்டிலும் உயர்ந்தவர் ஒருவரும் இல்லை. அதனால் நரசிம்மனே! உம்மைச் சரணடைகிறேன்.
காவல் காப்பவர்
* நரசிம்மரை வழிபடும் பெண்களுக்கு அவரே பாதுகாப்பாக இருப்பார்.
* பிரகலாதனின் வரலாற்றை கேட்டால் நரசிம்மர் அருள் கிடைக்கும்.
* பிரகலாதனை போல பக்தர்களுக்கு அருளை வாரி வழங்குவார் நரசிம்மர்.
* ஸ்ரீமத் பாகவதத்தில் உள்ள பிரகலாத சரித்திரத்தை மாலையில் படிப்பது நல்லது.
* உரிமையுடன் 'இதை எனக்கு செய்' என கேட்டால் உடனடியாகச் செய்வார் நரசிம்மர்.
* செவ்வாய் அன்று நரசிம்மரை வழிபட வழக்கில் வெற்றி கிடைக்கும்.
தெரியுமா உங்களுக்கு...
* ஸ்ரீராமருக்கு அடுத்த நிலையில் அதிகம் வழிபடப்படும் அவதாரம் நரசிம்மர்.
* நரசிம்மரை 'இளித்த வாயன்' எனச் சொன்னவர் இடைக்காடர். பேழை போன்ற
பெரிய வாய் கொண்டவர் என பொருள்.
* நரசிம்மர் கோயில் இருக்கும் இடத்தில் அனுமனும் குடியிருப்பார்.
* பிரதோஷ நேரத்தில் நரசிம்மர் துாணில் இருந்து அவதரித்தார்.
* நரசிம்மரை முதல் குருவாக கொண்டு அகோபில மடம் செயல்படுகிறது.
* அகோபில நரசிம்மரை பாடிய ஆழ்வார் திருமங்கையாழ்வார்.

