வங்கி கணக்குகளை பிறர் பயன்படுத்த அனுமதித்தால் சிறை: போலீஸ் எச்சரிக்கை
வங்கி கணக்குகளை பிறர் பயன்படுத்த அனுமதித்தால் சிறை: போலீஸ் எச்சரிக்கை
UPDATED : ஏப் 03, 2025 01:29 AM
ADDED : ஏப் 03, 2025 12:29 AM

சென்னை:'கமிஷன் தொகைக்கு ஆசைப்பட்டு, வங்கி கணக்கை பிறர் பயன்படுத்த அனுமதி அளிப்போர் கைது செய்யப்படுவர்' என, சைபர் குற்றப்பிரிவு தலைமையக போலீஸ் அதிகாரிகள் எச்சரித்துஉள்ளனர்.
அவர்கள் கூறியுள்ளதாவது:
சில தினங்களுக்கு முன், திருமணத்திற்கு இணையதளம் வாயிலாக வரன் தேடிய, தேனி மாவட்டத்தைச் சேர்ந்த வாலிபரிடம், பெண்கள் போல 'சாட்டிங்' செய்த நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள், மோசடி பணத்தை இரண்டு பெண்கள் பெயரில் உள்ள வங்கி கணக்குகளில், பாதிக்கப்பட்ட நபரை, 26 முறை செலுத்த வைத்துஉள்ளனர்.
அந்த வங்கி கணக்குகளை பயன்படுத்திக் கொள்ள, 2,000 ரூபாய் கமிஷன் தொகை தரப்பட்டு இருப்பது தெரியவந்தது.
தினசரி கூலி வேலை செய்யும் அந்த பெண்களை, மோசடி நபர்கள், கமிஷன் தொகை தருவதாக நம்ப வைத்து, அவர்களின் வங்கி கணக்கு வாயிலாக, 89 லட்சம் ரூபாய் சுருட்டி உள்ளனர்.
மொபைல் போனில், வீடியோ அழைப்பில் போலீஸ் போல பேசி, 'டிஜிட்டல்' கைது செய்து, 3.84 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில், சென்னையைச் சேர்ந்த உதவி பேராசிரியர் பரசுராமன், 35, கைது செய்யப்பட்டார்.
இவரும், பண மோசடி செய்யும் சைபர் குற்றவாளிகளுக்கு, வங்கி கணக்கை பயன்படுத்த அனுமதி அளித்து, பல லட்சம் ரூபாய் கமிஷன் பெற்றது தெரியவந்தது.
இப்படி பல்வேறு தரப்பினர், மோசடி நபர்களுக்கு தங்களின் வங்கி கணக்குகளை பயன்படுத்த அனுமதித்து, கமிஷன் தொகை பெறும் கலாசாரம் அதிகரித்து வருகிறது. இது தண்டனைக்குரிய குற்றம்.
இத்தகைய செயலில் யார் ஈடுபட்டாலும், அவர்கள் கைது செய்யப்பட்டு, சிறைகளில் அடைக்கப்படுவர்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

