ஜல்லிக்கட்டு முதல் பரிசு அறிவிப்பிற்கு எதிராக வழக்கு: உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
ஜல்லிக்கட்டு முதல் பரிசு அறிவிப்பிற்கு எதிராக வழக்கு: உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
ADDED : பிப் 07, 2024 07:24 AM
மதுரை: மதுரை மாவட்டம் அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டு காளைகளை அடக்கியதில் கார்த்திக்கிற்கு முதல் பரிசு அறிவித்ததற்கு எதிராக மற்றொரு வீரரான அபிசித்தர் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
சிவகங்கை மாவட்டம் பூவந்தியை சேர்ந்த அபிசித்தர் தாக்கல் செய்த மனு:
அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டில் நான் 18 காளைகளை அடக்கினேன். இதற்கு வீடியோ ஆதாரம் உள்ளது. மதுரை கருப்பாயூரணியை சேர்ந்த கார்த்திக் 18 காளைகளை அடக்கி முதல் பரிசு வென்றதாக அறிவிக்கப்பட்டது. அவர் அமைச்சர் ஒருவரின் நெருங்கிய உறவினர். காளைகளை அடக்குவதில் முதலிடம் பெறும் நோக்கில் அவருக்கு சட்டவிரோதமாக கூடுதல் நேர சலுகை வழங்கப்பட்டது. அவர் என்னைவிட குறைந்த காளைகளை அடக்கினார். எனக்கு குறைந்த நேரம் ஒதுக்கியதில் 18 காளைகளை அடக்கினேன்.
முதல் பரிசுக்கு எனது பெயரை அறிவித்திருக்க வேண்டும். கார்த்திக் தனது பெயரை முறையாக பதிவு செய்யவில்லை. வீடியோ ஆதாரம் அடிப்படையில் விசாரணை நடத்த வேண்டும். முதல் பரிசுக்கு எனது பெயரை அறிவிக்க வேண்டும் என கலெக்டர், டி.ஆர்.ஓ.,விற்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் அமர்வு கலெக்டர், டி.ஆர்.ஓ.,அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டு விழாக்குழுவிற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு 3 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

