ஆட்சியை காப்பாற்ற அடிக்கடி நிலைப்பாட்டை மாற்றும் கட்சி தி.மு.க., மீது ஜெயகுமார் புகார்
ஆட்சியை காப்பாற்ற அடிக்கடி நிலைப்பாட்டை மாற்றும் கட்சி தி.மு.க., மீது ஜெயகுமார் புகார்
ADDED : ஜன 26, 2025 03:15 AM
சென்னை: 'ஆட்சியை காப்பாற்ற அடிக்கடி நிலைப்பாட்டை மாற்றும் கட்சி தி.மு.க.,' என, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் குற்றம் சாட்டிஉள்ளார்.
அவரது அறிக்கை:
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி எழுப்பிய ஆதாரப்பூர்வமான கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல், அமைச்சர்கள் பெயரில், முதல்வர் ஸ்டாலின் வெற்று அறிக்கை வெளியிட்டு வருகிறார்.
தி.மு.க., ஆட்சியில், 2009 - -10, 2010 - -11ம் ஆண்டுகளில் பற்றாக்குறை பட்ஜெட்டை தாக்கல் செய்து விட்டு, 2011ல் உபரி பட்ஜெட் தாக்கல் செய்ததாக, அரசு நிகழ்ச்சியில் முதல்வர் பேசியிருக்கிறார்.
முதல்வர் ஸ்டாலினின் கொளத்துார் தொகுதியிலேயே மழைக்காலங்களில், மக்கள் படகில் செல்லும் நிலைதான் உள்ளது. 100 நாட்களில் 2.29 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டதாக அமைச்சர் நேரு கூறியிருக்கிறார்.
கோரிக்கை மனுக்களுக்கு ஒப்புதல் கடிதம் கொடுத்து விட்டாலே, தீர்வு காணப்பட்டதாக எடுத்துக் கொள்ளலாமா?
'சி.பி.ஐ., அமலாக்கத்துறை, வருமான வரித்துறை சோதனைக்கு பயந்து நடுங்குபவர்கள் அல்ல' என, அமைச்சர் பெரியசாமி கூறியிருக்கிறார். கருணாநிதி கைது செய்யப்பட்ட போது கதறியது யார்? '2ஜி' அலைக்கற்றை வழக்கில் என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும்.
எதிர்க்கட்சியாக இருந்த போது, பிரதமருக்கு கருப்புக்கொடி காட்டுவதும், ஆளுங்கட்சியானதும் வெள்ளைக்குடை பிடித்த தைரியமான தலைவர் யார் என்பதும் தெரியும். தமிழகத்தின் நலனுக்கு எதிராக யார் செயல்பட்டாலும், அவர்களை அ.தி.மு.க., எதிர்க்கும்.
மத்தியில் ஆட்சி அதிகாரத்திற்காக, பா.ஜ., காங்கிரசுக்கு முதுகு வளைந்து சேவை செய்ததை, தி.மு.க.,வினர் மறந்து விடக்கூடாது. ஆட்சியை காப்பாற்றிக்கொள்ள, தங்கள் நிலைப்பாட்டை அடிக்கடி மாற்றிக்கொள்ளும் கட்சிதான் தி.மு.க.,
எங்களை குறை சொல்வதை விடுத்து, 39 எம்.பி.,க்கள் வாயிலாக, மத்திய அரசிடமிருந்து தமிழகத்திற்கு தேவையான நிதியை பெற முயற்சி செய்யுங்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

