சூழ்ச்சியாளர்களின் சூதுமதியால் இடைத்தேர்தல்: ஜெ., அறிக்கை
சூழ்ச்சியாளர்களின் சூதுமதியால் இடைத்தேர்தல்: ஜெ., அறிக்கை
UPDATED : பிப் 13, 2015 12:18 AM
ADDED : பிப் 11, 2015 11:40 PM

சென்னை:'நாளுக்கு நாள், மக்கள் ஆதரவு பெருகுவதை, பொறுத்துக் கொள்ள முடியாத, சூழ்ச்சியாளர்களின் சூதுமதியால், ஸ்ரீரங்கம் தொகுதிக்கு, இடைத்தேர்தல் நடைபெறும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த தேர்தலில், எனக்கே ஓட்டு போடும் எண்ணத்துடன், உங்கள் ஓட்டுகளை, அ.தி.மு.க.,விற்கு அளியுங்கள்' என, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா, வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை:ஸ்ரீரங்கம் என் தாய் மண். என் சொந்த வீடு. தலைமுறை தலைமுறையாக, என் முன்னோர் வாழ்ந்து வந்த, புண்ணிய பூமி. எனவேதான், என் இதய துடிப்போடு கலந்து விட்ட உறவு, ஸ்ரீரங்கத்திற்கு உண்டு.கடந்த 2011 சட்டசபை தேர்தலில், ஸ்ரீரங்கம் தொகுதியில், நான் போட்டியிட்டபோது, பெருவாரியான ஓட்டு வித்தியாசத்தில், என்னை வெற்றி பெறச் செய்தீர்கள்.கடந்த லோக்சபா தேர்தலிலும், வியக்கத்தக்க ஓட்டு வித்தியாசத்தை அளித்தீர்கள். இதற்கு நன்றி. நாளுக்கு நாள், மக்கள் ஆதரவு பெருகுவதை, பொறுத்துக் கொள்ள முடியாத சூழ்ச்சியாளர்களின் சூதுமதியால், ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதிக்கு, இடைத்தேர்தல் நடத்தும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
ஸ்ரீரங்கம் வாக்காளர்கள், எனக்கே ஓட்டு போடும் எண்ணத்துடன், உங்கள் ஓட்டுகளை, இரட்டை இலை சின்னத்திற்கு அளிக்க வேண்டும். ஸ்ரீரங்கம் தொகுதியில், கடந்த மூன்று ஆண்டுகளாக, பல்வேறு பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.என் முயற்சிகளுக்கு, மேலும் உற்சாகம் தரும் வகையில், இடைத்தேர்தலில், பெருவாரியான ஓட்டு வித்தியாசத்தில், அ.தி.மு.க., வேட்பாளரை வெற்றி பெற வைக்க வேண்டும். அத்துடன், எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரையும், டிபாசிட் இழக்கச் செய்ய வேண்டும்.இவ்வாறு, ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
