திருச்செந்துாரில் சூரனை வதம் செய்தார் ஜெயந்திநாதர்!
திருச்செந்துாரில் சூரனை வதம் செய்தார் ஜெயந்திநாதர்!
ADDED : நவ 15, 2026 08:56 PM

துாத்துக்குடி: திருச்செந்துாரில் சூரபத்மனை ஜெயந்திநாதர் வதம் செய்த நிகழ்ச்சியில், பல லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்த சஷ்டி திருவிழா கடந்த, 10ம் தேதி யாகசாலை பூஜையுடன் துவங்கியது. சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று (நவ.,15) மாலை கோவில் கடற்கரையில் நடந்தது. இதையொட்டி அதிகாலை, 1:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 1:30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2:00 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், அதனை தொடர்ந்து தீபாராதனை நடந்தது. காலை, 6:00 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளியதும் யாகசாலை பூஜைகள் துவங்கின.
மதியம் 2:00 மணிக்கு திருவாவடுதுறை சஷ்டி மண்பத்தில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது.
மாலை, 4:30 மணிக்கு சூரசம்ஹாரத்திற்கு சுவாமி ஜெயந்திநாதர் புறப்பட்டார். முன்னதாக சிவன் கோவிலில் இருந்து சூரபத்மன் எழுந்தருளி உள்மாட வீதி, ரதவீதிகள் சுற்றி கோவில் கடற்கரைக்கு படை பரிவாரங்களுடன் வந்து சேர்ந்தார்.
அங்கு முதலில் யானை முகத்துடன் கூடிய சூரன், சுவாமி ஜெயந்திநாதருடன் போரிடும் நிகழ்ச்சி துவங்கியது.
மூன்று முறை சுவாமியை சுற்றி வந்து போர் புரிந்த சூரன், நேர் எதிர் திசையில் நின்று போர் புரிந்தான். யானை முகத்துடன் கூடிய சூரனை சுவாமி ஜெயந்திநாதர் தனது வேலால் வீழ்த்தினார்.
பின், சிங்க முகமாக மாறி சூரன் சுவாமியுடன் போர் புரிந்தான். சிங்க முக சூரனை சுவாமி ஜெயந்திநாதர் தனது வேலால் சம்ஹாரம் செய்தார். ஆணவம் அடங்காத சூரபத்மன் தனது சுயரூபத்துடன், சுவாமி ஜெயந்திநாதருடன் போர் புரிந்தான். அவனையும் சுவாமி ஜெயந்திநாதர் தனது வெற்றி வேலால் சம்ஹாரம் செய்தார். அப்போது கடற்கரையில் திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் ‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா’ என பக்தி கோஷம் முழங்கினர்.
இறுதியில் சேவலாகவும், மாமரமாகவும் மாறி போரிட்ட சூரனை, கருணை கடவுளான செந்திலாண்டவர் ஆணவம், வன்மம், மாயை ஆகியவற்றை ஒழித்து தனக்குள் ஆட்கொண்டார். சேவல், மாமரத்தை இரண்டாக பிரித்து சேவலை தனது கொடியாகவும், மாமரத்தை மயிலாக மாற்றி தனது வாகனமாக ஏற்றுகொண்டு சேவற்கொடியோனாக பக்தர்களுக்கு காட்சி்யளிந்தார்.
இதையடுத்து, சுவாமி ஜெயந்திநாதர் சந்தோஷ மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிந்தார். அங்கு சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானைக்கு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை நடந்தது. சம்ஹார நிகழ்ச்சி முடிந்ததும் கோவில்வளாகத்தில் விரதம் மேற்கொண்ட பக்தர்கள் கடலில் புனித நீராடி விரதத்தை நிறைவு செய்தனர்.
