அ.தி.மு.க., தொண்டர்கள் துாங்கவில்லை போர்க்களத்துக்கு முந்தைய ஓய்வு தான் ஜெயராமன் சொல்கிறார்
அ.தி.மு.க., தொண்டர்கள் துாங்கவில்லை போர்க்களத்துக்கு முந்தைய ஓய்வு தான் ஜெயராமன் சொல்கிறார்
ADDED : அக் 06, 2024 07:25 PM

திருப்பூர்:''அ.தி.மு.க., தொண்டர்கள் துாங்கவில்லை. இது, போர்க்களத்துக்கு முந்தைய ஓய்வு தான்,'' என, அ.தி.மு.க., தேர்தல் பிரிவு செயலர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசினார்.
திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க., அலுவலகத்தில் நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில், ஜெயராமன் பேசியதாவது:
அ.தி.மு.க., தொண்டர்கள் துாங்கவில்லை; விழிப்பாகி விட்டனர். இது, போர்க்களத்துக்கு முந்தைய ஓய்வு தான். கடந்த, 2011ல் நாம் நடத்திய, கோவை, திருச்சி, மதுரையில் மாநாடுகள், தமிழக வரலாற்றை திருப்பி போட்டன. அதேபோல, மனித சங்கிலி போராட்டம் எழுச்சி பெற வேண்டும். கட்சியில், உழைப்பவர்களுக்கு சிறப்பான எதிர்காலம் உண்டு; அதற்கான அங்கீகாரம் கிடைக்கும்.அ.தி.மு.க., என்பது சிம்ம சொப்பனம். யாருக்கும் அஞ்சாது. அ.தி.மு.க., ஆட்சி மலர இன்னும், ஒன்றரை ஆண்டுகள் தான் இருக்கிறது. இனி யாருக்கும் ஓய்வு வேண்டாம்; சுறுசுறுப்பாக பணியாற்ற வேண்டும்.
களத்தில் ஒப்பாரி வைப்பவர்கள் வெற்றி பெற முடியாது. தி.மு.க., ஆட்சிக்கு முடிவுகட்ட ஒன்றுபட்டு போராட தயாராக வேண்டும். பொதுமக்கள் புரட்சி வெகுவிரைவில் வரும்; தளபதியாக இருந்து வழிநடத்த நாம் தயாராக வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

