ADDED : ஏப் 16, 2025 02:06 AM

ராமேஸ்வரம்:மத்திய அரசின் 'சாகர்மாலா' திட்டத்தில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் சுற்றுலா படகு சவாரிக்கு ரூ.6.43 கோடியில் ஜெட்டி பாலம் கட்டும் பணி துவங்கியது.
இந்தியாவில் முக்கிய நகரங்கள் இடையே வணிகம், சுற்றுலா ரீதியாக நீர்வழி போக்குவரத்தை துவக்கிட மத்திய அரசு சாகர்மாலா எனும் திட்டத்தை அமல்படுத்தியது. அதன்படி புனித சுற்றுலாதலமாக உள்ள ராமேஸ்வரத்தில் சுற்றுலா படகு சவாரி துவக்குவதற்காக தமிழ்நாடு கடல்சார் வாரியம் ஆய்வு செய்து ராமேஸ்வரம், தனுஷ்கோடி, தங்கச்சிமடம் வில்லுாண்டி தீர்த்தம், தேவிபட்டினத்தில் சுற்றுலா படகு சவாரி துவக்க முடிவு செய்தது.
முதற்கட்டமாக சாகர்மாலா திட்ட நிதி ரூ. 6.43 கோடியில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் 120 மீ., துாரத்தில் பயணிகளுக்கான பாலம் அமைக்க கடற்கரையில் 20 அடி ஆழத்திற்கு துளையிட்டு துாண்கள் அமைக்கும் பணி துவங்கியது. இப்பணி 6 மாதங்களுக்குள் முடிந்து சுற்றுலா படகு சவாரி துவங்க வாய்ப்பு உள்ளது என ஊழியர்கள் தெரிவித்தனர்.

