ADDED : டிச 20, 2024 02:06 AM
சென்னை:கோடநாடு கொலை வழக்கில் தொடர்புபடுத்தியதற்காக இழப்பீடு கோரிய பழனிசாமி வழக்கில், தாக்கல் செய்த பதில் மனுவில் ஆட்சேபனை கருத்துக்களை நீக்க தயாராக இருப்பதாக, பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் தரப்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி, வீடியோ வெளியிட்டதற்காக, 1.10 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கும்படி, டில்லி பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேலுக்கு உத்தரவிடக் கோரி, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில், மேத்யூ சாமுவேல், பதில் மனுத் தாக்கல் செய்தார்.
பதில் மனுவில் தவறான கருத்துக்களை கூறியிருப்பதாகவும், அவற்றை நீக்கும்படியும், பழனிசாமி மனுத் தாக்கல் செய்தார். மனு, நீதிபதி ஜெயச்சந்திரன் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. ஆட்சேபனை கருத்துக்களை நீக்க தயாராக இருப்பதாக மேத்யூ சாமுவேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, விசாரணையை ஜனவரி 2க்கு நீதிபதி தள்ளி வைத்தார்.