ஜோயாலுக்காஸ் குழும தலைவரின் சுயசரிதை புத்தகம் வெளியீடு
ஜோயாலுக்காஸ் குழும தலைவரின் சுயசரிதை புத்தகம் வெளியீடு
UPDATED : ஆக 03, 2025 12:53 AM
ADDED : ஆக 03, 2025 12:51 AM

சென்னை:ஜோயாலுக்காஸ் குழும தலைவர் ஜோய் ஆலுக்காஸின், சுயசரிதை புத்தகமான, 'தங்க மகன் ஜோய்' என்ற நுாலின் தமிழ் பதிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
![]() |
இந்நுால் முதலில் ஆங்கிலத்தில் வெளியானது. அதன்பின், அரபு, மலையாளம் மொழிகளில் வெளியிடப்பட்டது. தற்போது, தமிழில் வெளியிடப்பட்டு உள்ளது. தமிழ்நுால் வெளியீட்டு விழா, நேற்று முன்தினம் சென்னையில் நடந்தது.
விழாவில், ஜோயாலுக்காஸ் குழும தலைவர் ஜோய் ஆலுக்காஸ் பேசியதாவது:
இப்புத்தகத்துக்கு கிடைத்த வரவேற்பு நெகிழ வைக்கிறது. எங்கள் கனவில் நம்பிக்கை வைத்து, இந்த பாதையில் பயணித்த, எங்களின் நலன் விரும்பிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் கூட்டாளிகளுக்கு, நான் என்றும் நன்றி உள்ளவனாக இருப்பேன்.
பல ஆண்டுகளாக ஜோயாலுக்காஸ் மீது, மக்கள் வைத்த நம்பிக்கை, ஒரு வணிகத்தை தாண்டி, மிக உயர்வாக கட்டி எழுப்பப்பட்டுள்ளது.
இது, ஒரு தனித்துவமான பந்தத்தையும் உருவாக்கி உள்ளது. 'தங்க மகன் ஜோய்' என்ற நுாலின் வாயிலாக, நாம் அடைந்த மகிழ்ச்சியின் ஒரு பகுதியை, திருப்பிக் கொடுக்கிறேன்.
இந்நுால் எப்போதும் நம்மை திறந்த கரங்களுடன் தழுவி இருக்கும், தமிழகத்தின் இதயங்களை சென்றடையும் என்று நம்புகிறேன்.
இந்த புத்தகம், கனவு காணும் ஒவ்வொரு இளைஞரிடமும் நம்பிக்கையை துாண்ட முடிந்தால், என் நோக்கத்தை நிறைவேற்றும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் பேசுகையில், ''ஜோயாலுக்காஸ் எழுதிய, அவரது சுயசரிதம் படிப்பவர்களுக்கு, ஏதோ ஒரு, 'த்ரில்லர்' படம் பார்ப்பது போல அமையும்.
''இந்த புத்தகம் உழைப்புடன் கூடிய சாமர்த்தியத்தை தெளிவாக எடுத்துக் கூறுகிறது. இளம் தொழில் முனைவோர், வணிகம் சார்ந்து தொழில் செய்வோருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்,'' என்றார்.
ஜவுளி வர்த்தகர் நல்லிகுப்புசாமி பேசுகையில், ''எவ்வளவோ பேர் வியாபாரம் செய்து, தொழிலில் முன்னேறி வருகின்றனர். அவர்களில் சிலர் மட்டுமே, உலக அளவில் மதிக்கப்பட்டு திரும்பி பார்க்கப்படுகின்றனர். ஜோயாலுக்காஸ் உழைத்து இந்த நிலைக்கு முன்னேறி உள்ளார்,'' என்றார்.
விழாவில், புத்தகத்தின் பதிப்பாளர் சச்சின் சர்மா, வேல்ஸ் பல்கலை நிறுவனர் ஐசரி கணேஷ், ஜோய் ஆலுக்காஸ் மனைவி ஜாலி, திரைப்பட நடிகர் தியாகராஜன், தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, கிழக்கு பதிப்பகத்தின் பதிப்பாளர் பத்ரி ஷேஷாத்ரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

